'மதுவின் கொலைக்கு கேரள வனத்துறையும் காரணம்': உறவினர்கள் குற்றச்சாட்டு

மதுவின் கொலைக்கு, கேரள வனத்துறையும் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மது

கேரள மாநிலம், அட்டப்பாடி அருகே இருக்கும் கடுகுமண்ணா என்ற மலை கிராமத்தைச் சேர்ந்தவர் மது சிறு வயதிலேயே தந்தையை இழந்து விடுகிறார். அம்மாவும், சகோதரிகள்தான் குடும்பம். விபத்து ஒன்றில் மனநலம் குன்றவே, வீட்டை விட்டு பிரிந்து சென்றார் மது. சுமார் 10 ஆண்டுகளாக வீட்டுக்கும், அவருக்கும் தொடர்பு இல்லை. வனப்பகுதியில் உள்ள ஒரு சிறிய குகைதான் மதுவின் வீடு.

தாழ்வுமனப்பான்மை காரணமாக, மனிதர்களிடம் அதிகம் பேசமாட்டார். வனப்பகுதியில் கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு வாழ்ந்துவந்தார். வனப்பகுதியில் ஏதும் கிடைக்காவிட்டால் மட்டும், முக்காலி பகுதிக்கு வருவார். அவரது உருவத்தைப் பார்த்த உடனேயே, சிலர் உணவு கொடுத்துவிடுவார்கள். அப்படி ஏதும் கிடைக்காவிடின்தான், பிஸ்கெட், அரிசி போன்றவற்றை வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று சாப்பிடுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று வனப்பகுதிக்குள் சென்ற ஒரு கும்பல், மதுவை கட்டிவைத்து அடித்தனர். பின்னர், போலீஸ் கஸ்டடியில் ஒப்படைத்தாக சிலர் கூறுகின்றனர். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மதுவின் உயிர் பிரிந்துவிடுகிறது. மதுவுக்க நடந்த கொடுமைகள், சமூக வலைதளங்களில் வெளியாகி, நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

போராட்டம்

"கடவுளின் தேசம்" என்று அழைக்கப்படும் கேரளா "அரக்கர்களின் தேசமாகிவிட்டது" என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து. மதுவைக் கொலை செய்த கொடூரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரது குடும்பத்துக்கு அம்மாநில அரசு, 10 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மதுவின் மரணத்துக்கு நீதி கேட்டு, அட்டப்பாடியில் பழங்குடி மக்கள் இன்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அட்டப்பாடி, அகலி, முக்காலி, மன்னார்காடு வரை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மதுவின் கொலையில் வனத்துறைக்கும் பங்கிருப்பதாக, அவரது உறவினர்களும், பழங்குடி சங்கங்களும் குற்றம் சாட்டியுள்ளன.

"மதுவைக் கொன்ற கொலைகாரர்களுக்கு, இப்படி ஒருத்தன் வனப்பகுதிக்குள்தான் இருக்கான்.. என்று கூறி அவர்களுக்கு மதுவின் இருப்பிடத்தை காட்டியே வனத்துறை அதிகாரிகள்தான்" என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே, மதுவின் உடல், இன்று சிட்டக்கி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!