வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (25/02/2018)

கடைசி தொடர்பு:06:30 (25/02/2018)

"குடிநீர் வராததுக்கு மின்வாரியம்தான் காரணம்!"-அலுவலர்களைக் கண்டித்து பொதுமக்கள் மறியல் 

கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் வராமல் இருப்பதற்கு மின்சார ஊழியர்களின் மெத்தனப் போக்குத்தான் காரணம்என்று கூறி, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மின்வாரிய ஊழியர்களைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ளது வீரப்பட்டி என்ற கிராமம். இங்குள்ள  மெயின் ரோட்டில் உள்ள தர்ஹா அருகில் இருந்த இரண்டு பழுதான மின்கம்பங்கள் சில நாட்களுக்கு முன்னால் முறிந்து விழுந்தன. இதனால் அந்த மின் கம்பங்கள் வழியாகச்செல்லும் மின்சாரம் தடைபட்டது.அதன் காரணமாக வீரப்பட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் பணி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் வினியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து புதிய  மின் கம்பங்களை அமைத்து மின் இணைப்பு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென இலுப்பூர் மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். "ஆனால், கோரிக்கையை அலட்சியம் செய்ததோடு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை"என்று கொந்தளிக்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள்.


இந்நிலையில் வீரப்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலுமாக  பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் காலி குடங்களுடன்  சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை மணப்பாறை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கிருந்தபடியே  மின்வாரிய அதிகாரிகளிடமும் போனில் பேசினார். அவர்கள் மாலைக்குள் மின் விநியோகம் செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.