“புதிய கட்சி துவங்கப் போகிறேன்!”- ஜெ.தீபா அறிவிப்பு

கடந்த வருடம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆரம்பித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பேரவை துவங்கிய ஓராண்டு முடிந்த நிலையில் விரைவில் புதிய கட்சி துவங்க உள்ளதாக திருச்சியில் அறிவித்துள்ளார்.

தீபாஉங்களால் நான் உங்களுக்காகவே எனும் முழக்கத்தோடு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜெ.தீபா, திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில், நடைபெற்ற எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கோபி, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஷாஜகான், தில்லை நகர்ப் பகுதி செயலாளர் ஹாரூன், ஏர்போர்ட் பகுதி செயலாளர் நந்தகுமார், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், சரியாக 8மணிக்கு 'தங்கத்தாரகையே வருக வருக வருக' பாடல் இசைக்கும்போது, ஜெ.தீபா மேடையேறினார். அதைப் பார்த்து கூட்டத்தில் இருந்த மக்கள், “இளைய புரட்சி தலைவி வாழ்க, வருங்கால முதல்வர் வாழ்க, என முழக்கம் எழுப்பினர்.

ஜெ.பிறந்தநாளுக்கான கேக்கை வெட்டிய தீபா, 2 சலவைப் பெட்டி, 3 தையல் இயந்திரம், 10 வேட்டி. சேலை , மாற்றுத்திறனாளி ஒருவருக்குச் சைக்கிள் உள்ளிட்டவற்றை மக்களுக்கு வழங்குவதுபோல் போஸ் கொடுத்தார்.

இறுதியாக மைக் பிடித்த ஜெ.தீபா,.“அம்மா ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், தமிழக மக்களுக்கு நடந்துவரும் கொடுமைகளை பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருக்கமாட்டார். இப்படியான சூழலில் தமிழகம் சிக்கியிருக்காது. அவரின் இறப்புக்குப் பிறகு, கட்சியையும்,தமிழகத்தையும் காப்பாற்றக்கோரி, அம்மா மரணத்துக்கு நியாயம் கேட்டு அ.தி.மு.க தொண்டர்கள் என் வீட்டு முன்பாக கூடி என்னை அரசியலுக்கு அழைத்தார்கள். அவர்கள் அழைத்ததாலேயே நான் அரசியலுக்கு வந்தேன். அம்மாவும், தலைவர் எம்.ஜி.ஆரும் தெய்வமாக இருந்து நம்மை வழிநடத்துவார்கள். எம்.ஜி.ஆர் மக்களுக்காக இயக்கத்தை உருவாக்கினார். அவருக்குப் பின் அவரால் அடையாளம் காணப்பட்ட ஜெயலலிதா இறுதி முச்சு உள்ளவரை மக்களுக்காக இந்த இயக்கத்தை வழிநடத்தினார். அவர்கள் வழியில் இந்த இயக்கத்தைத் துவங்கினேன். இந்தப் பேரவை ஆரம்பித்து ஓராண்டு ஆகிறது. ஜெயலலிதா இடத்துக்கு யாரும் வர முடியாது. தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தவர். அவரது பணிகளை தொடர முடியும். அம்மாவின் வழியில் தமிழக மக்களுக்கு நல்லாட்சியைத் தரவேண்டும். ஆனால் தமிழக அரசு கடந்த இரண்டு வருடங்களாக எப்படி செயல்படுகிறது என்பதைக் கவனியுங்கள், மத்திய அரசின் தலையீட்டோடுதான் அரசாங்கம் நடக்கிறது. ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் அரசு, மத்திய அரசின் துணையோடு, கைக்கூலி அரசாக இயங்கி வருகிறது.

அடிமை இந்தியாவில், வெள்ளையர்ககாலத்தில் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தோமோ, அதைத் துயரத்தை நாம் இப்போது அனுபவிக்கிறோம். மத்தியில் ஆளும் அரசு அடிமை ஆட்சியை செயல்பட்டுத்திவருவது துயரம். இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்களே கேளுங்கள். அம்மா கொண்டுவந்த பெண்கள் நல்வாழ்வுக்கான திட்டமான ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை, இன்னொரு கட்சியின் தலைவரை, பிரதமர் மோடியை வைத்து இன்று முதல்வர் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தொடங்கிவைக்கின்றனர். இதைத் தட்டிக்கேட்டால் அதை மறைக்க, அரசு செலவில், பல விழா களை நடத்துகிறார்கள். இன்று சென்னையில் திறக்கப்பட்ட சிலை, யாரோ ஒருவரது சிலையை அதனை அம்மா சிலை என்கிறார்கள். எனவே இந்த அடிமை ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும். இப்படியான ஆட்சி தேவையா என மக்கள் ஆட்சியாளர்களிடம் கேளுங்கள்.

திரைப்படத்தில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் அடுத்தடுத்து கட்சி ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஒருநாள் முதல்வராக ஆக நினைக்கிறார்களோ, அல்லது டில்லி தர்பார் ஆட்சியை இங்கு நடத்தப்போகிறார்களா? என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும். எம்.ஜி.ஆர் வழியில், அம்மா வழியில் நற்பணி மேற்கொண்டு ஆசியாவில் முதல் மாநிலமாகத் தமிழகத்தை கொண்டுவருவதுதான் என் லட்சியம்.

பணபலத்தால் மக்களை அவர்கள் பக்கம் இழுத்துவிடலாம் எனப் பலர் நினைக்கிறார்கள்.நம்மைத் துயரத்தில் தள்ளியவர்கள் சட்டசபைக்கு சென்று விட்டார்கள். ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணையில் சந்தேகம் மர்மங்களை வெளிச்சித்திற்கு கொண்டுவரவேண்டும். ஒருநபர் கமிஷன் கண்துடைப்பாக இல்லாமல், சி.பி.ஐ.இந்த வழக்கை விசாரணை நடத்தவேண்டும். தமிழக மக்கள் ஆட்டு மந்தைகள் இல்லை பல நாடகங்கள் நடத்தலாம் தவிர நீண்டநாள் செயல்படுத்த முடியாது.அவர்கள் வழியில் செல்லும் நான் தொடங்கியுள்ள லட்சியப் பயணம் நிச்சயம் தொடரும்.என்பயணத்தில் நீங்கள் இருப்பீர்கள் என நம்புகிறேன். அ.தி.மு.கவின் அங்கமாகச் செயல்பட்டு வந்த இந்தப் பேரவை விரைவில் மக்களுக்கான இயக்கமாக,கட்சியாக மாற்றப்படும்.

ஜெ.மரணம் தொடர்பாக தமிழக அரசின் ஆறுமுகசாமி கமிஷன் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அவர் என்னதான் கண்டுபிடித்தார் என தெளிவுபடுத்தவும், அம்மாவின் மரணத்தை தெளிவுபடுத்த அரசு தவறிவிட்டது. மக்களிடம் கொண்டு செல்வதுடன், அத்தையின் மரணத்தின் உண்மை அறிய சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!