’ஸ்ரீதேவி மறைவு இந்திய திரையுலகிற்கே பேரிழப்பு!’- தமிழக முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஸ்ரீதேவி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ட்விட்டர் பதிவில், ’ஸ்ரீதேவி அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே ஒரு பேரிழப்பாகும். ஸ்ரீதேவி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

’ஈடு இணையில்லா நடிப்பு திறமையை கொண்டவர் ஸ்ரீதேவி. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ட்விட்டர் பதிவில் ‘மிகச் சிறந்த நடிகையான ஸ்ரீதேவியின் மறைவு துரதிருஷ்டவசமானது. ஸ்ரீதேவியின் திரையுலக வாழ்க்கை தலைமுறைகள் கடந்தும் அனைவரையும் ஈர்த்தது’ என்று தெரிவித்துள்ளார்.

’தென் தமிழகத்தில் பிறந்து தனது நடிப்பு திறமையால் இந்திய தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த ஸ்ரீதேவிக்கு எனது அஞ்சலி, அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சினிமா துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்திய சினிமா உலகிற்கு இது மிகப் பெரிய பேரிழப்பு’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

நடிகை ரேகா தனது ட்விட்டர் பதிவில் ’ஸ்ரீதேவியின் மறைவு கனவாக இருக்கக்கூடாதா என நினைக்கத் தோன்றுகிறது’ என தெரிவித்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!