வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (25/02/2018)

கடைசி தொடர்பு:13:04 (25/02/2018)

ஜல்லிக்கட்டு புரட்சியில் உருவான 'என் தேசம் என் உரிமை' கட்சி... தற்போதைய நிலை என்ன?

ஜல்லிக்கட்டில் உருவான என் தேசம் என் உரிமை கட்சியினருடன் கமல்

ல்லிக்கட்டுப் போராட்டத்த்துக்குப் பிறகு பல இளைஞர்கள் அமைப்பு தமிழகத்தில் உருவாகியது. இந்த அமைப்புகள் தமிழகப் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்தும் வருகின்றன. இதே ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில்தான் 'என் தேசம் என் உரிமை' என்ற கட்சியும் உதயமானது. 2017-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி உதயமான இந்தக் கட்சி, ஆரம்பத்தில் பரபரப்பாகச் செயல்பட்டது. அதன்பிறகு, நாளடைவில் அப்படி ஒரு கட்சி இருக்கிறதா... இல்லையா... என்று மக்கள் கருத்து தெரிவிக்கும் அளவுக்குச் சமூக வலைதளங்களால் வறுத்தெடுக்கப்பட்டது. இதுபற்றி அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எபிநேசரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

"உங்கள் கட்சியின் இன்றைய நிலைமை எப்படி இருக்கிறது?"

"அரசியல் கட்சியை நிர்ணயிப்பதும், அதை மக்களுக்குக் கொண்டுசெல்வதும் மூன்று விஷயங்கள்தான். அவை பணம், மீடியா, இறங்கி வேலை செய்வதற்கு ஆட்கள். எங்களிடம் பணமும் இல்லை. மீடியா பலமும் இல்லை. ஆனால் மக்கள் பிரச்னையின்போது குரல்கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள். எங்கள் கட்சி தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது".

ஜல்லிக்கட்டு"தமிழக மக்களின் பிரச்னைகளின்போது உங்கள் கட்சியை அதிகம் காணவில்லையே?"

"யார் சொன்னார்கள்? தமிழக மக்கள் பிரச்னையின்போது எங்கள் கட்சி சார்பாகத் தொடர்ந்து போராடி வந்தோம். டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடந்தபோது நான் டெல்லிக்கே சென்றுவிட்டேன். அவர்களுக்கு ஆதரவாகச் சில நாள்கள் நானும் அவர்களுடனேயே இருந்து போராட்டத்தில் ஈடுபட்டேன். பெட்ரோல் விலையேறியதற்கு நாங்கள்தான் அதிக அளவில் சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்தோம். அதுபோலத் தமிழகத்துக்கு எதிராக வரும் அனைத்து பிரச்னைகளுக்காகவும் எங்கள் கட்சி தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறது. அதுபோல முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அய்யாவின் பிறந்தநாள் விழாவையும் மிகச் சிறப்பாக கொண்டாடினோம். ஆனால் எங்கள் போராட்டம் வெளியே தெரியாமல் போய்விட்டது".

"உங்கள் கட்சியில் எவ்வளவு எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இருக்கிறார்கள்?"

"தமிழகம் முழுவதும் அல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழ் இளைஞர்கள் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள். அதுபோல மாவட்டவாரியாக 39 நிர்வாகிகளும், மாநில வாரியாக 10 நிர்வாகிகளும் இருக்கிறார்கள். எங்கள் கட்சிக்கு தலைவர் என்று யாரும் கிடையாது. ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும்தான். நான் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன்."

"ஆர்.கே.நகர் தேர்தலில் உங்களுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது?"

"அதில் எல்லாமே பிரச்னைதான். ஆர்.கே.நகர் தேர்தலின்போது 'ஜனநாயகம் செத்துவிட்டது'. நீட் (NEET) தேர்வைப்போல பீட் (PET - Political Entrance Exam) தேர்வை ஆர்.கே.நகர் தேர்தலின்போது நடைமுறைப்படுத்தினேன். அதவாது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு தேர்வு. அந்தத் தேர்வில் வெற்றிபெறுபவர் மட்டும்தான் தேர்தலில் நிற்க முடியும். அதுபோலச் சுமார் 75 வேட்பாளர்களை அழைத்தேன். அவர்களும் வந்தார்கள். மக்கள் கேள்வி கேட்டார்கள்; வேட்பாளர்களும் பதில் சொன்னார்கள். ஆர்.கே.நகர் தேர்தலின்போது என்னை வேண்டுமென்றே தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். அதற்கு ஒன்றுமில்லாத காரணங்களைச் சொன்னார்கள். அதனால்தான் சொன்னேன் ஆர்.கே.நகர் தேர்தலின்போது 'ஜனநாயகம் செத்துவிட்டது' என்று''.

"கமல் அரசியல் பயணம் பற்றி?"

"கமல் ஒரு வாய்ச்சொல் வீரர். அவர், ஏதாவது நல்லது செய்வார் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அப்படி நம்பிய மக்கள் வாயில் மண்ணை அள்ளிப் போடப்போகிறார் கமல். அவரைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். ஒருமுறை அவரைச் சந்தித்து, 'குறுவிவசாயிகளுக்கு இருக்கும் மொத்த கடன் ரூபாய் 80 கோடி மட்டும்தான். இதற்கு, சுமார் ஒருகோடி இளைஞர்கள் ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்தால் போதும்... விவசாயிகளின் பிரச்னை தீர்ந்துவிடும்' என்று சொன்னேன். இதை கமல், 'நல்ல திட்டம்' என்று சொன்னார். 'இதற்காக என்னால் முடிந்த உதவிகளைத் தங்களுக்குச்  நான் செய்கிறேன் என்றும், அதற்கான அதிகாரிகளிடத்தில் நான் பேசுகிறேன்' என்றும் சொன்னார். அதன்பின்பு அந்த உதவியைக் கேட்டபோது செய்ய மறுத்துவிட்டார். அவரை யாரும் எதிர்த்து பேசிவிடக்கூடாது என்று அவர் நினைக்கிறார். அதனால்தான் அவர் சீமானைச் சந்தித்தார்."

விவசாயிகள் போராட்டம்

"நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்கு உங்கள் கட்சியிலிருந்து யாராவது சென்றீர்களா?"

"அந்த விசாரணையிலிருந்து எவ்வித அழைப்பும் எங்களுக்கு வரவில்லை. அதனால் நாங்கள் செல்லவில்லை. ஆனால், ஜல்லிக்கட்டு தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் நடந்த விசாரணைக்கு நான் சென்றேன்".

"உங்கள் கட்சியின் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும்?"

"தற்போது எங்கள் கட்சியின் முக்கியப் பணி ஆன்லைன் மூலமாக அனைத்து தொண்டர்களையும் ஒருங்கிணைப்பதுதான். இதற்காக ஒரு ஆப் (APP) மற்றும் இணையதளம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். அதில் எங்கள் தொண்டர்கள் பற்றிய முழு டேட்டாவும், என்ன வேலை, எப்படிச் செய்வது என்பது பற்றியும் அதில் இருக்கும். தமிழக மக்களுக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் அதை எதிர்த்து முதலில் குரல்கொடுப்பது எங்கள் கட்சியாகத்தான் இருக்கும்".


டிரெண்டிங் @ விகடன்