வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (25/02/2018)

கடைசி தொடர்பு:14:12 (26/02/2018)

பீடி புகைத்துக் கொண்டிருந்தவரின் முகத்தில் மதுவை உமிழ்ந்த நண்பர்! - முகத்தில் தீப்பற்றி உயிரிழந்த சோகம்

புகைத்தபடி தன்னுடன் பேசிக்கொண்டிருந்த நண்பர் முகத்தில் மதுவை உமிழ, அந்த நபர் முகம் முழுவதும் தீ பற்றி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

தீ

டெல்லியில் உள்ள சாக்பூர் எனும் இடத்தில்தான் இந்தச் சம்பவம் கடந்த 22-ம் தேதி நடந்துள்ளது. சாக்பூரில் உள்ள கீதஞ்சலி பார்க் எனும் பகுதியில் வசித்து வருபவர் பங்கஜ் சிங், 27. இவரது மனைவி ப்ருதி சிங், 25. இதே பகுதியில் வசித்து வருபவர் பர்தீப் குமார். அவர்கள் இருவரும் நண்பர்கள். பங்கஜ் சிங் வீடு திரும்பத் தாமதமான நிலையில், இரவு 8.மணிக்கு மேல் அவரைத் தேடி மனைவி ப்ருதி சிங் சென்றுள்ளார். பங்கஜ் சிங், ’பீடி’ புகைத்துக் கொண்டே, பர்தீப் குமாருடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த ப்ருதி சிங், தன் கணவரை அழைக்கச் சென்றுள்ளார்.

பர்தீப் குமார், தனது கையில் மது பாட்டிலைப் பிடித்துக் கொண்டு, மது அருந்தியவாறே, பங்கஜ் சிங் உடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். இவர்கள், இருவரின் உரையாடல் ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக முற்றியது. இதில், ஆதிரமடைந்த பர்தீப் குமார், மதுவை பங்கஜ் சிங் முகத்தில் துப்பியுள்ளார். பீடியிலிருந்த நெருப்பு காரணமாக பங்கஜ் சிங்கின் முகத்தில் மது பட்டவுடன் தீ பற்றியது. இதனால் வலியில் அலறித் துடித்தபடி, தெருவில் அவர் ஓடியுள்ளார். இதைப் பார்த்த ப்ருதி சிங், விரைந்து வந்து தீயை அணைக்க கணவரின் முகத்தில் நீரை ஊற்றினார்.  தீ பற்றியதில் முகம் முழுவதும் சிதிலமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பங்கஜ் சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.