சிறுவனைக் கொன்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மர்மக் கும்பல்! - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்மக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் 10 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறார். மற்ற இரு பெண்களும் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வெல்லம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியகலா (பெயர் மாற்றபட்டுள்ளது). 6 பிள்ளைகளுக்குத் தாயான இவர் கணவனை இழந்தவர். ஒரு பெண் உட்பட இவரின் 4 பிள்ளைகள் பெங்களுர் மற்றும் திருப்பூரில் பணியாற்றி வரும் நிலையில் 14 வயது மகள் சரண்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 10 வயது மகன் பிரபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோருடன் வெல்லம்பட்டில் வசித்து வருகிறார். சரண்யாவும், பக்கத்து வீட்டில் இருக்கும் ரம்யாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்புப் படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் தினமும் காலையில் குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். அதன்படி கடந்த 22-ம் தேதி காலையில் வழக்கம்போல தண்ணீர் எடுத்து வருவதற்காக சரண்யாவை அழைக்க அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார் ரம்யா. அங்கே வீடு முழுவதும் ரத்தம் வழிந்தோடிக் கொண்டிருக்க, சரண்யாவும் அவரது தாயும் தலையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு பலத்தக் காயங்களோடு முனகிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அதைப் பார்த்ததும் அலறிக் கொண்டு வெளியில் ஓடி வந்த ரம்யா, அருகிலிருப்பவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதன்பிறகு அருகில் வசிப்பவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சூரியகலா, சரண்யா இருவரும் தலையில் பலத்த காயங்களோடு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததோடு, சிறுவன் பிரபு உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது. உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்த அவர்கள் சூரியகலாவையும், சரண்யாவையும் திருக்கோயிலூர் அரசு மருத்துவனையில் அனுமதித்தனர். சிறுவனின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸ், சூரியகலாவையும், சரண்யாவையும் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தது. சந்தேகத்தின் பேரில் அதே பகுதியில் உள்ள 4 பேரை பிடித்து விசாரித்த போலீஸார் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமல் தவித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக போலீஸில் அவர்களது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். அதில், ``அந்த குடும்பத்தினருக்கும்,வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்தவருக்கும் நிலத்தகராறு இருந்து வருகிறது. அந்த நிலத்தை அவர் அபகரிக்க முயற்சி செய்து பல்வேறு மிரட்டல்களை விடுத்திருக்கிறார். அதனால் இந்த சம்பவத்திற்கு அவர்தான் காரணமாக இருக்கும்” என்று போலீசிடம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் உயிரிழந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்த  உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உறுதி கூறியதை அடுத்தே அவர்கள் சிறுவன் பிரபுவின் உடலை வாங்கிச் சென்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இந்த வழக்கை கையில் எடுத்திருக்கும் இளைஞர்களுக்கான சமூக விழிப்புஉணர்வு இயக்கத்தின் இயக்குனர் பாண்டியனிடம் பேசினோம். அவர் கூறுகையில், “புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கபட்டிருக்கும் சிறுமி சரண்யா கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். அவளது உடலில் அதற்கான அடையாளங்கள் இருப்பதோடு, 2 தையல்களும் போடப்பட்டிருகின்றன. தாய், மகள் இருவருமே தற்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார். இதற்கிடையே “குற்றவாளிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம். மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவ அறிக்கைகள் எங்களுக்கு வரவில்லை. அதைப்பொறுத்து எங்களின் விசாரணை இருக்கும்” என்று போலீஸார் தரப்பில் சொல்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!