வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (26/02/2018)

கடைசி தொடர்பு:08:00 (26/02/2018)

''ரிமோட் கன்ட்ரோல் மூலம் நாம் ஆளப்பட்டிருக்கிறோம்” காங்கிரஸை விளாசிய மோடி

”காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் ரிமோட் கன்ட்ரோல் மூலம் நாம் ஆளப்பட்டிருக்கிறோம்” என புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

மோடி

புதுச்சேரி ஆரோவில் பொன்விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, லாஸ்பேட்டை விமானத் தள மைதானத்தில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, “புதுச்சேரி சகோதர சகோதரிகளே வணக்கம். உங்களைப் பார்க்க புதுச்சேரி வந்தது ரொம்ப சந்தோஷம்” என்று  தமிழில் தொடங்கினார். அதன்பின் இந்தியில் தொடர்ந்த அவர், “நான் நீண்ட நாள்களுக்குப் பிறகு புதுச்சேரி வந்திருக்கிறேன். சித்தர்களும், தெய்வீக மனிதர்களும் வாழும் புண்ணிய பூமி இது. இந்தப் புண்ணிய பூமியில் வாழும் நீங்கள் பாக்கியசாலிகள். நானும் பாக்கியசாலியாக உணர்கிறேன். புதுச்சேரி கிராம மக்களுக்கு கிராமமாகவும், நகர மக்களுக்கு நகரமாகவும் உள்ளது. நம்முடைய பாரம்பரியத்தில், விருந்தினர்கள் தெய்வத்துக்கு சமம் என்பதை இந்த புதுச்சேரி மக்கள் நிரூபித்து வாழ்கின்றனர். புதுச்சேரிக்கு தப்பிவந்த அரவிந்தரை ஞானகுருவாகவும், பாரதியாரை மகாகவி தேசிய கவியாகவும் மாற்றினீர்கள் நீங்கள். அதேபோல, சுதந்திரப்போராட்ட வீரர் வாஞ்சிநாதனையும்  ஏற்று, சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு ஆற்றியுள்ளீர்கள். ஆங்கிலேயர்கள், பத்திரிகை அச்சடித்து விநியோகிப்பது குற்றம் என்றனர். ஆனால், இங்கு பத்திரிகைகள் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டு, சுதந்திர விழிப்புஉணர்வு ஏற்பட்டது. புதுச்சேரி மக்களிடம் திறமை இருக்கிறது. வெல்லக்கூடிய இச்சை இருக்கிறது. நம்மோடு மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாம் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்திற்குச் செல்லவிடாமல் எந்த சக்தி தடுக்கிறது? புதுச்சேரியில் ஆட்சியில் இருப்போர், இந்த மண்ணுக்கு அநீதியை இழைத்திருக்கிறார்கள்.

நரேந்திர  மோடி

புதுச்சேரி முன்னேற்றத்துக்கு, கடந்த 10 ஆண்டுகளாக தடை போடப்பட்டுள்ளது. 1947-ம் ஆண்டில் நம்மோடு சுதந்திரம் பெற்ற பல நாடுகள், இன்று அனைத்துத் துறைகளிலும் முன்னேறியுள்ளன. நாம் தீவிரமாக சிந்திக்கவேண்டிய தருணமிது. நாம் முன்னேறுவதில் என்ன குறைபாடு? அரசு செயல்பாட்டில் என்ன குறை என்பதை நம் நாட்டிலுள்ள அறிவு ஜீவிகள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். நம் நாட்டை முதலில் ஒருவர் 17 ஆண்டுகள் ஆட்சிசெய்தார். பிறகு, அவரது மகள் 14 ஆண்டுகள் ஆட்சிசெய்தார். அதன்பிறகு, அவரது மகன், அதையடுத்து 10 ஆண்டுகள் அந்தக் குடும்பத்தின் ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி நடைபெற்றது.  கூட்டிப்பார்த்தால், ஒரே குடும்பம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 48 ஆண்டுகள் நம்மீது ஆட்சி செலுத்தியுள்ளது. அவர்கள் 48 ஆண்டுகள் ஆட்சிசெய்தார்கள். மே மாதத்துடன் எங்களுக்கு 48 மாத ஆட்சி பூர்த்தியாகிறது. அறிவு ஜீவிகள் சிந்திக்க வேண்டும். 48 ஆண்டுகள் ஆட்சியையும் 48 மாத ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒரு காலத்தில், ஜவுளித் துறையில் செழித்தது. தற்போது மினுமினுப்பு இழந்துகிடக்கிறது. கூட்டுறவு இயக்கம் முழுமையாக ஒடிந்துபோயுள்ளது. நாடு முழுவதும் நவீன மயமாக்கல் நடக்கும்போது, போக்குவரத்துத்துறை முழுவதும் நொடிந்துபோயுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம். மத்தியில் காங்கிரஸ் இருந்ததுபோல இங்கு தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்துவருகிறது. புதுச்சேரி மாநிலம் ஏன் பின்னடைந்திருக்கிறது என்பதற்கு காங்கிரஸ், மக்கள் முன்பு பதில் சொல்லியாக வேண்டும்.

புதுச்சேரி

டெல்லியில் இருந்துகொண்டு ஜனநாயகம் பற்றி காங்கிரஸார் பேசுகிறார்கள். ஆனால், புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை? கிராம ஜனநாயகத்தைத் தடுக்கிறார்கள். கிராம மக்களின் ஜனநாயகக் குரல்வளையை நெறிப்பதன் காரணம் என்ன? நியமன எம்.எல்.ஏ-க்கள், சட்டப்படி ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவையில் பணியாற்ற வேண்டும். ஆனால், நியமன எம்.எல்.ஏ-க்களை சட்டமன்றத்தில் சென்று பணி செய்யவிடாததன் காரணம் என்ன? புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு முன்னதாக வாழ்த்துச் சொல்ல விரும்புகிறேன். வரும் ஜூன் மாதத்துக்குப் பிறகு, முழு காங்கிரஸ் கட்சியும் நாராயணசாமியை முன்மாதிரியாக நிற்கவைத்துக் காட்டுவார்கள். அதற்கு என்ன காரணம் என்பதை நான் சொல்கிறேன். வடகிழக்கு மாநிலத்தில் நடைபெற்றுவரும் தேர்தலில் காங்கிரஸ் வீட்டுக்குப் போய்விடும். அதன்பின், கர்நாடக அரசும் வீட்டுக்குப் போய்விடும். அதன்பின், காங்கிரஸ் கை காட்டும் ஒரே முதல்வராக நாராயணசாமி மட்டும்தான் இருப்பார். எங்களின் ஒரே முதல்வர் இவர் என்று அவரை நாடு முழுவதும் காட்டுவார்கள். ஜூன் மாதத்துக்குப் பிறகு, அவரை தோளில் வைத்து ஒரே முதல்வர் என்று நாடு முழுவதும் காட்டவேண்டிய சூழல் வரும். நம் அனைவரது கனவும் புதிய இந்தியாதான். அது எப்போது நிறைவேறும்? புதிய புதுச்சேரி உருவாகும்போது, புதிய இந்தியாவும் பரிணமிக்கும்” என்று முடித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க