வெளியிடப்பட்ட நேரம்: 03:20 (26/02/2018)

கடைசி தொடர்பு:16:46 (17/08/2018)

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு கோலாகல கொண்டாட்டம்..!

புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில், ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று காலை திருவப்பூர் கவிநாடு திடலில் நடந்தது. இந்த மாபெரும் போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஆட்சியர் கணேஷ் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

புதக்கோட்டை அருகில் உள்ள திருவப்பூர் ஜல்லிக்கட்டு, மாவட்டத்திலேயே புகழ்பெற்றது. மாடுபிடிவீரர்களும் ஜல்லிக்கட்டுக்காளைகள் வளர்ப்போரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஜல்லிக்கட்டு, நேற்று நடந்தது. 9-மணிக்கு ஆரம்பிக்கவேண்டிய இந்தப் போட்டி, தாமதமாக 10 மணிக்கு மேல்தான் ஆரம்பமானது.
இதில், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, மணப்பாறை, மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து 1,000-க்கும்  மேற்பட்ட காளைகள், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர்.

போட்டிகளைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் உற்சாகத்துடன் வந்திருந்தனர். வழக்கம்போலவே அரசு வழிகாட்டுதல் விதிகளின்படி முறையாக நடந்த இந்த ஜல்லிக்கட்டில், ஆலங்குடி, அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட உள்ளூரில் புகழ்பெற்ற காளைகளும் வந்திருந்தன. இந்தப் போட்டியில் அதிகப் பரிசுகளை அள்ளப்போவது  எந்த மாவட்டம் என்றதொரு போட்டி, மாட்டின் உரிமையாளர்கள் மத்தியில் நிலவியது. காளைகள், வழக்கம்போல மருத்துவக் குழுவினரால் பரிசோதனைசெய்யப்பட்டு, போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டன.  

ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்ட காளைகள், வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்து சென்றன. அவற்றை களத்தில் நின்ற 500 மாடுபிடிவீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கிப் பரிசுகளை அள்ளினார்கள். இங்குள்ள முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவும் நேற்று நடைபெற்றதால், அதைக் காண கோயிலுக்கு வந்த பக்தர்களின் கூட்டமும் சேர்ந்துகொண்டது. அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும்  இங்கு நடைபெற்றுவிடக்கூடாது என்பதில் விழா கமிட்டியார் கவனமாக இருந்தார்கள். பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன. இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில், வீரர்கள் மற்றும் வேடிக்கைபார்த்தவர்கள் உள்பட 37 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு, ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் தயார்நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். விழா ஏற்பாடுகளை கவிநாடு, திருவப்பூர் ஜல்லிக்கட்டு கமிட்டியினர் செய்திருந்தார்கள்.