வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (26/02/2018)

கடைசி தொடர்பு:09:30 (26/02/2018)

சிறுமி ஹாசினி வழக்கின் தீர்ப்புக்கு என்ன காரணம்? விவரிக்கிறார் வழக்கை நடத்திய ஷெரின் பாஸ்கோ

ஷெரின் பாஸ்கோ

“இந்த வழக்கைப் பொறுத்தவரை, ‘நட்சத்திரா பவுண்டேஷன்’ என்ற என்.ஜீ.ஓ. அமைப்புத்தான் இதில் பெரும் பங்கு எடுத்தது. அதன் அமைப்பின் நிறுவனர் ஷெரின் பாஸ்கோ. அந்த அமைப்பினர்தான், காசு செலவுசெய்து மிகவும் கஷ்டப்பட்டுப் போராடினார்கள். அவர்களைப் போன்ற அமைப்பினர் இருப்பதால்தான் எங்களைப் போன்ற வழக்கறிஞர்களுக்கு வழக்கை நடத்துவதற்குச் சுலபமாக இருக்கிறது” என்று சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் கண்ணதாசன், கடந்த 20-ம் தேதி ‘விகடன்’ இணையதளத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்திருந்தார். இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் ஷெரின் பாஸ்கோவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“நாட்டில் பாலியல் வழக்குகள் அதிகமிருக்கும்போது, சிறுமி ஹாசினி வழக்கில் மட்டும் தீவிரம் காட்டியது ஏன்?”

“பாலியல் வழக்குகளைப் பொறுத்தவரை ஒரு வருடக்காலத்தில் முடிக்க வேண்டும் என்று சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால், சந்தர்ப்பச் சூழ்நிலையால் அதுபோல் நடப்பதில்லை. ஹாசினி வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்குவதற்கு முழுமுதற்காரணமே மீடியாதான். இந்த வழக்குக்கு மீடியா சப்போர்ட் அதிகமிருந்தது. குறிப்பாக, இறந்துபோன ஹாசினிக்கு எங்களால் கொடுக்க முடிந்தது நீதி மட்டுமே. ஆனால், அவளைப்போன்று பாதிக்கப்பட்ட பல சிறுமிகளுக்கு எதிர்காலம் இருக்கிறது. ஆகையால், அந்தக் குழந்தைகளையும் அவர்களுடைய பெற்றோர்களையும் நாங்கள் கொண்டுபோய் மீடியாவிடம் நிறுத்த முடியாது. இதனால்தான், மற்ற வழக்குகளில் வேகமாகச் செல்லமுடியவில்லை”. 

வழக்கறிஞர் கண்ணதாசன்

“இந்த வழக்குக்காக வழக்கறிஞர் கண்ணதாசனை எப்படிச் சந்தித்தீர்கள்?”

பத்திரிகை ஒன்றில் என்னுடைய பேட்டியும், வழக்கறிஞர் கண்ணதாசன் சாருடைய பேட்டியும் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் எங்கள் தரப்பில் ஆஜராகிய வக்கீல் ஒருவர், குற்றவாளிக்கு ஆதரவாகச் சென்றதால், நாங்கள் அவரை மாற்றிவிட்டோம். அப்போதுதான் கண்ணதாசன் சாருடைய பேட்டியைப் பார்த்தபிறகு... அவரிடம், ‘எங்களிடம் ஒரு வழக்கு இருக்கிறது. அதற்கு நீங்கள் ஆஜராகி வாதாட முடியுமா’ என்று கேட்டோம். அவரும் ஒப்புக்கொண்டு ஆஜராகினார். உண்மையிலேயே அவர்போன்று வழக்கறிஞர்கள் கிடைப்பது சகஜம். சாதாரண ஸ்டாம்ப் பேப்பருக்குக்கூட காசு வாங்காதவர் அவர். சிறுமி ஹாசினி வழக்கைப் பொறுத்தவரைக்கும் இரவு இரண்டு, மூன்று மணிவரை தூங்காது... அவர் வழக்குக்கான தகவல்களைத் தேடியிருக்கிறார். இந்த ஒரு வழக்கு மட்டுமல்ல... எல்லா வழக்குகளையுமே அவர் அப்படித்தான் பார்க்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்தக் காலத்தில் ஒரு ரூபாய்கூட வாங்காமல் வாதாடுபவர்கள் இருக்கிறார்கள் என்பது பெரிய விஷயம். பணம் வாங்கிக்கொண்டு வாதாடுபவர்கள்கூட இப்படியெல்லாம் கண்விழித்திருக்க மாட்டார்கள். மேலும், வேறு ஒரு வழக்கறிஞருக்கு இதுபோன்ற கேஸ் விஷயமாக என்னுடைய கழுத்தில் இருந்த நகையைக் கழற்றி அடகுவைத்து காசு கொண்டுபோய் கொடுத்தேன். ஆனால், அவரோ எதிர்தரப்பு பக்கம் சாய்ந்துவிட்டார். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் இதுபோன்ற மனிதர்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது”.

“ஹாசினியின் தந்தை பாபு குறித்து?”

“ ‘ஹாசினிக்கு ஃபுல் சப்போர்ட் இருக்கிறது. கவலைப்படாதீர்கள். நான் உங்களுக்கு ஒரு மகளாக இருக்கிறேன். அதன்மூலம் ஒரு லைஃப் கிடைக்கும்’ என்று அவரிடம் சொன்னேன். சந்தோஷப்பட்டார். குறிப்பாக, இதுபோன்ற ஒரு வழக்கில்... அந்தக் குழந்தையின் பெற்றோர் குற்றவாளி தரப்பிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, ‘அதுபோல் எதுவும் நடக்கவில்லை’ என்று சொல்லிவிட்டனர். ஆனால், பாபு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகக் கடைசிவரை எங்களுடன் இருந்தார். அவரைப்போன்று அப்பாக்களும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது”. 

“இந்த வழக்கு வெற்றிபெறுவதற்கு யார் காரணம்?”

“கடைசிவரை எங்களுடன் இருந்த ஹாசினியின் தந்தை பாபு, எப்போதும் எங்களுக்குப் பக்கபலமாய் இருந்த காவல் துறையினர், காசு வாங்காமல் சவால்களுடன் இறுதிவரை போராடிய வழக்கறிஞர் கண்ணதாசன் ஆகியோரால்தான் இந்த வழக்கில் ஜெயிக்க முடிந்தது”. 

“இந்த வழக்கில், காவல் துறையின் பங்கு என்ன?”

“ஹாசினி வழக்கில் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார் ஒருநாள்கூடத் தவறாது கோர்ட்டுக்கு வராமல் இருந்ததில்லை. அவர்கள் எல்லாம் வராமல் இருந்திருந்தால், நிச்சயம் இந்த வழக்கில் ஜெயித்திருக்க முடியாது. நான் கோர்ட்டுக்கு 10.30 மணிக்குத்தான் வருவேன். ஆனால், போலீஸார் 10.15 மணிக்கே ஆஜராகிவிடுவார்கள். ஒருகட்டத்தில், குற்றவாளி தரப்பு மிரட்ட ஆரம்பித்தபோது... இன்ஸ்பெக்டரே, ‘இனி... நீங்கள் வரவேண்டாம். இந்தக் கேஸை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று தைரியத்தைக் கொடுத்தார். உண்மையைச் சொல்லப்போனால், இந்த வழக்கில் கண்ணதாசன் சாரும், காவல் துறையும் இல்லையென்றால் நிச்சயம் ஜெயித்திருக்க முடியாது. ஆனால், அவர்களை யாரும் பாராட்டவே இல்லை”. 

ஷெரின் பாஸ்கோ

“இதுதவிர, உங்களுடைய வேறு வழக்குகளுக்குப் போலீஸின் பங்களிப்பு என்ன?”

“இதேபோன்ற இன்னொரு வழக்கில் தவறிழைத்த நபர்கள், அந்தச் சிறுமியின் பெற்றோர்களை மிரட்டுகின்றனர். இதுகுறித்து போலீஸாரிடம் புகார் சொன்னோம். அதனடிப்படையிலும் போலீஸார் அவர்கள்மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். இப்படி எல்லா வகையிலும் அவர்கள் எங்களுக்குப் பக்கபலமாக இருக்கின்றனர்”.

“தஷ்வந்த் பற்றி?”

“அவன் மிகவும் சின்னப் பையன். இதுபோன்று நடக்கும் என்று அவன் யோசிக்கவில்லை”.

“தஷ்வந்த் போன்று தவறுசெய்பவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“குறிப்பாக இதுபோன்ற இன்னொரு வழக்கில் தீங்கிழைத்தவருக்கு 37 நாள்களில் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படித் தீங்கிழைத்தவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுவதால் அவர்கள் வேறு தவறு செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?”

“இதுபோன்று தவறுசெய்பவர்கள் பெருகுவதற்கு என்ன காரணம்?”

“கல்வியறிவு, போதுமான விழிப்பு உணர்வு இல்லாததால்தான் இதுபோன்ற குற்றவாளிகள் பெருகுகிறார்கள். இவர்கள்மீது ஒரு சாதாரண புகார்கூடக் கொடுக்கத் தெரியாத அளவுக்கு கல்வியறிவு, விழிப்பு உணர்வு இல்லாத பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்”. 

“தவறு செய்யும் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் பெற்றோர்கள் பற்றி?”

“தம் குழந்தைகள் சிறுசிறு தவறுகள் செய்யும்போதே, அதைக் கண்டித்து திருத்த வேண்டும். ஆனால், அவர்கள் அதை விட்டுவிட்டுக் குழந்தைகளைக் காப்பாற்றத்தான் முயற்சி செய்கின்றனர். இதனால் குழந்தைகளுக்குத் தைரியம் வந்துவிடுகிறது. இதற்காக நாம் பெற்றோர்களைக் குறை சொல்ல முடியாது. ஏனெனில், எல்லாப் பெற்றோருமே குழந்தைக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள். என் அப்பாகூட எனக்கு ஆதரவாகத்தான் இருப்பார். ஆகையால் அவர்களைக் குறை சொல்ல முடியாது”.

தஷ்வந்த்

“இதற்கு என்ன வழி?”

“தவறு செய்பவர்களிடமே ஓர் புரிதல் வேண்டும். அதாவது, நான் இவ்வளவு தப்பு செய்தும் எனக்காக என் பேரன்ட்ஸ் சப்போர்ட்டாக இருக்கிறார்களே. அதற்காகவாவது நாம் திருந்த வேண்டும் என்று அவர்கள் நினைக்க வேண்டும். சிலர் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஒருசிலர் இதை ஏற்றுக்கொள்வதில்லை. தவறு செய்பவர்கள் இதை நினைத்தால் அவர்களும் திருந்த ஒரு வாய்ப்பிருக்கிறது”.

“உங்கள் அமைப்பின் செயல்பாடுகள் என்ன?”

“குழந்தைகளுக்கு நேரும் பாலியல் சம்பந்தமான வழக்குகளை மட்டுமே எடுத்து நடத்துகிறோம். அதுபோன்ற வழக்குகளுக்கு நீதிமன்றத்தின் நீதியையே நாடுகிறோம்”.

“உங்கள் அமைப்பின் கிளைகள் வேறு எங்கு இருக்கின்றன?”

“சென்னையில் மட்டும்தான் இருக்கிறது. வேறு எங்கும் இல்லை”.

“அப்படியென்றால், சென்னையில் உள்ள வழக்குகளை மட்டும்தான் எடுத்து நடத்துவீர்களா?”

“இல்லை. தமிழ்நாட்டில் எந்தச் சிறுமி பாதிக்கப்பட்டாலும், அவர்கள் எங்களை அணுகினால் அதற்காக வாதாடுவோம்”.

“குழந்தைகளின் பாலியல் சீண்டல்களுக்குத் தனிச் சட்டம் வேண்டுமா?”

“இப்போதிருக்கும் சட்டங்களே போதும். அதுவே, கடுமையானவை. சில சந்தர்ப்பங்களில் ஒரு வருடக்காலத்தில் வழக்கு முடியாவிட்டால் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் குறித்த வழக்குகளை அதன் அவசியம் கருதி விரைவாக முடிக்க வேண்டும். இதில் தீங்கிழைத்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இதற்கு நீதிமன்றம் ஆவனச் செய்ய வேண்டும். இந்தச் சட்டங்களைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்”. 

நட்சத்திரா பவுண்டேசன் லோகோ“தமிழகத்தில், சிறுமி பாலியல் சீண்டல் வழக்குகள் அதிகமிருக்கிறதா?”

“தமிழகத்தில் மட்டுமல்ல... எங்குப் பார்த்தாலும் சிறுமி பாலியல் வழக்குகள் அதிகமிருக்கின்றன. இதில், தமிழகத்தில் விழிப்பு உணர்வு அடைந்து பெற்றோர்கள் புகார் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால், வட மாநிலங்களில் அப்படியில்லை. தமிழகத்தில் இந்த விஷயத்தில் அரசாங்கமும், காவல் துறையும் சிறப்பாகச் செயல்படுகின்றன”.

“சிறுமிகளின் பாலியல் துன்பறுத்தல்களுக்கு என்ன காரணம்?”

“சிறுமிகள் மட்டுமல்ல... இன்று எல்லாப் பெண்களும் பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படுகின்றனர். அதேநேரத்தில், சிறுமிகளிடம் மட்டும் பாலியல் சீண்டல்கள் பெருகுவதற்குக் காரணம், அவர்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள் என்ற தைரியம் சிலரிடம் இருக்கிறது. வெளியில் சொன்னாலும் குழந்தைதானே... அதை யார் நம்பப்போகிறார் என்கிற தைரியமும் அவர்களிடம் இருக்கிறது. 

“இதற்கு என்ன தீர்வு?”

“இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் பற்றி ஒரு புரிதல் இருக்கிறது. ஆனால், அதற்குத் தீர்வாய் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றுமட்டும்தான் தெரிவதில்லை. ஒருசில குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லும். அப்படி அவர்கள் சொல்லும்போது அதில் கூடுதல் கவனம் எடுத்து பெற்றோர்களும் விரைந்து செயல்பட வேண்டும். இன்று பிரபலங்களும் பாலியல் சீண்டல்கள் பற்றித் துணிந்து புகார் கொடுக்க ஆரம்பிப்பதால்தான் தவறு செய்பவர்களுக்கு ஒரு பயம் ஏற்படுகிறது. அதுபோல் குழந்தைகளும் இதுபோன்று பாதிக்கப்பட்டால், உடனே பெற்றோரிடம் சொல்லவேண்டும். அதற்கான விழிப்பு உணர்வை எல்லோரும் ஏற்படுத்த வேண்டும். தவறு செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்போது, அதைப் பார்த்து மற்றவர்களுக்கு அதுபோன்று தவறு செய்யக்கூடாது என்ற எண்ணம் வந்துவிடும்”.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்