கட்சியைக் கேட்கும் தினகரன்...  ஆட்சியில் பங்கு கேட்கும் பன்னீர்செல்வம்... கிருஷ்ணர் சிலை தந்த எடப்பாடி பழனிசாமி! | What does modi's visit to chennai did to the AIADMK party? Has the hustle been cleared?

வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (26/02/2018)

கடைசி தொடர்பு:14:54 (26/02/2018)

கட்சியைக் கேட்கும் தினகரன்...  ஆட்சியில் பங்கு கேட்கும் பன்னீர்செல்வம்... கிருஷ்ணர் சிலை தந்த எடப்பாடி பழனிசாமி!                        ஆட்சி யில் சரிபாதி கேட்கும் ஓ.பி.எஸ்., மோடியுடன்

'ஆட்சியை யாராவது நடத்திக்கொண்டுபோங்கள். கட்சியை என் கையில் கொடுங்கள், அதை சிறப்பாக்கிக்காட்டுகிறேன்' என்று டி.டி.வி. தினகரன் தொடர்ந்து சொல்லிவருகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்போ,'பேசியபடி ஆட்சியில் முறையான அதிகார பாகத்தைப் பிரித்துக்கொடுங்கள். இல்லையென்றால், நாங்கள் கிளம்பிவிடுவோம்' என்று எடப்பாடி தரப்பைப் பார்த்துச் சொல்ல ஆரம்பித்துள்ளது. நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வருகிற தமிழகத்தின் ஆளுங்கட்சி சண்டையைத் தீர்க்கத்தான் நம்பகமான, அதிகாரம் மிக்க ஒருவர் தேவைப்பட்டது. மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்கும் விழா என்ற பெயரில், தமிழகம்  வந்து போன பிரதமர் மோடி தான், ஆளுங்கட்சி சண்டையைத் தீர்த்துவைத்துவிட்டுப் போனதாகச் சொல்கிறார்கள். விழாவுக்கு  வந்த மோடி, 'ஜெயலலிதாவைப்  புறக்கணிக்க பல  காரணங்கள் இருக்கலாம். எடப்பாடியும் புறக்கணித்தது எந்த வகையில் நியாயம்? என்று அடுத்த சண்டைக்கான கேள்வியும் விதைக்கப்பட்டுள்ளது. கடந்த  30 ஆண்டுகளாக,  பிப்ரவரி 24-ம் தேதியை  திருவிழா போல கொண்டாடிவந்த அ.தி.மு.க-வினர்,  ஜெயலலிதா இல்லாத 2018-ம் ஆண்டு பிறந்த நாளையும் கொண்டாடினர். பிரதமர் மோடி பங்கேற்ற  'மானிய விலையில் ஸ்கூட்டர்' வழங்கும் விழாவும்,  இதே நாளில்தான்  நடந்தது. விழாவுக்காக சென்னைப் பல்கலைக்கழக மண்டபமோ, வேறு பெரிய அரங்கமோ  திட்டமிடப்படவில்லை. கலைவாணர் அரங்க வாசலில் ஷாமியானா பந்தல் போட்டு, ஸ்கூட்டரை வழங்கி முடித்தனர்.

                         பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

விழாவில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, "பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் நான் பெருமைப்படுகிறேன். பெண்கள் படித்தால் குடும்பமே கற்றதாக அர்த்தம்.  அம்மா ஸ்கூட்டர் திட்டத்தைத் தொடங்கிவைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பொதுமக்கள் நலன் சார்ந்தே  மத்திய அரசு  திட்டங்களை வகுத்துவருகிறது.  பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது. புதிதாகப் பணியில் சேரும் பெண்களுக்கான பி.எஃப் பணத்தை அரசு குறைத்துள்ளது. பெண்களுக்கான மகப்பேறு விடுமுறைக் காலம் 26 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.  சுயவேலைவாய்ப்புத் திட்டத்தில் 70 சதவிகிதம் பயன்பெறுவது பெண்களே.  மத்திய அரசு தந்த 96 கோடி எல்.இ.டி பல்புகள் மூலம் ரூ. 59 கோடிக்கு மின் கட்டணம் சேமிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக, ரூ. 3,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 1லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்கியுள்ளோம். மத்திய அரசின் திட்டம்மூலம் தமிழக விவசாயிகளும் பயன்பெற்றுவருகின்றனர்.

மத்தியில் காங்கிரஸ்  ஆட்சி செய்தபோது, 13-வது நிதிக் குழு மூலம் தமிழகத்துக்கு 81 ஆயிரம்  கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. பா.ஜ.க  ஆட்சியில், தமிழகத்துக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உஜ்வாலா திட்டத்தில் மூன்றரை கோடி இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன" என்றெல்லாம் பா.ஜ.க ஆட்சிமன்றக் குழுவில் பேசுவதுபோல பேசி, உரையை நிறைவுசெய்தார் மோடி.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, 'ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், தமிழகம் அடைந்த நன்மைகள்'குறித்து ஒரு பட்டியலை வாசித்தார். பின்னர்,  "இந்தியாவை மாபெரும் வல்லரசாக்கும் திட்டங்களை வகுத்து, விரைந்து செயலாற்றிக்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, மகளிர் வளர்ச்சியில் அதிக ஈடுபாடுகொண்டு, பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திவருவதை இந்தியாவே பாராட்டுகிறது" என்று புகழ்ந்து தள்ளினார். அடுத்ததாக, "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் காவிரி மேலாண்மை வாரியம்,  காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். எடப்பாடியின் இந்தக் கோரிக்கையை, மோடி  ரசிக்கவில்லை; பதிலும் சொல்லவில்லை. 'விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்தித்து மனு கொடுக்க, ஏற்கெனவே  எடப்பாடி அனுமதி பெற்றிருக்கிறார். அப்படி அனுமதியைப் பெற்றுவிட்டு, இப்போது பொதுவிழாவில் அதையே சொல்லி வற்புறுத்துவது சரியல்ல... அதனால்தான்  எடப்பாடியின் கோரிக்கைக்கு, மோடிஜீ  எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை' என்று அதே இடத்திலேயே பா.ஜ.க-வினர் கமென்ட் அடித்தனர்.
கோரிக்கையை மோடி ஏற்றாரா இல்லையா என்பது குறித்தெல்லாம், எடப்பாடியும் ரியாக்‌ஷன் காட்டவில்லை.

                      மோடிக்கு எடப்பாடி கொடுத்த கிருஷ்ணர் சிலை

ஆனால், மோடிக்கு ஜெயலலிதா அளித்ததுபோன்றே கிருஷ்ணர் உருவச்சிலையைப் பரிசளித்து, 'ஜெயலலிதாவின் இடத்தில் இருப்பது நான்தான்' என்று பதிவுசெய்வதில்  உறுதிகாட்டினார். ஏற்கெனவே, விழாவின் எந்தப் பக்கமும்  தன்னுடைய புகைப்படங்களே இல்லாத விரக்தியில் இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மோடிக்கு 'வாலன்டைன் -டே' வுக்குக் கொடுப்பதுபோல ஒரு ஒற்றை ரோஜாவைக் கொடுத்துவிட்டு ஓரமாக நின்றுகொண்டார். விழாவின் நிறைவில், ஆளுநர் ரோஹித் பன்வாரிலால் பேசுவார் என்று விழாவைத் தொகுத்தளித்த சுதாசேஷய்யன் அறிவிக்க... பிரதமரிடமிருந்து வந்த சிக்னல்,  ஆளுநரின் நிறைவுரை இல்லாமலே விழாவை முடிக்கவைத்தது. தேசியகீதம்கூட இசைக்கப்படவில்லை. விழாவை முடித்துக்கொண்டு ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் போகிறார் என்று தகவல் சொல்லப்பட்டது. அங்கிருந்து பிரதமர் புதுவை போனார், அரவிந்தர் ஆஸ்ரமத்தில் தியானம் செய்தார். பின்னர் டெல்லி போய்விட்டார். 

அ.தி.மு.க வட்டாரத்தில், "காவிரி நதிநீர் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை, முதல்வராக இருந்த ஜெயலலிதா,  கடந்த 7.10.2002-ல் கூட்டினார். முதல்வராக இருந்த கருணாநிதி, 7.10.2007-ல் கூட்டினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த 22.2.2018 அன்று, அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பேசும்போது,  2002- ம் ஆண்டு முதல் 2007-ம்  (தி.மு.க. அரசு) ஆண்டுவரை  காவிரி கடந்துவந்த பாதையைச் சொன்னார். மறந்தும்கூட, காவிரியில் ஜெயலலிதா எடுத்த நிலைப்பாடுபற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஜெயலலிதாகுறித்து எதுவும் பேசாததால், மோடி மட்டுமல்லாமல் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினும் அகமகிழ்ந்திருக்கிறார். எடப்பாடியைப் பொறுத்தவரை, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகியோர் மூலமாகத் தனது அரசுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் இருக்கவே, இந்த நிலைப்பாட்டை எடுக்கிறார்... மொத்தத்தில் பா.ஜ.க-வின் தமிழகப் பிரதிநிதியாகவே மாறிவிட்டிருக்கிறார். வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி முதல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் மாநாடு நடக்க உள்ளது. மாநாடு முடிந்த மறு வாரம், தமிழக சட்டசபை கூடுகிறது. சட்டசபை கூட்டத்துக்குப் பின், எப்போது வேண்டுமானாலும் பா.ஜ.க மூலமாக ஆட்சிக்கு ஆபத்து என்ற தகவலைப் பொய்யாக்க, எடப்பாடி தீவிரம் காட்டிவருகிறார்.  

ஓ.பன்னீர் செல்வத்துடன் இணக்கமாகப் போகலாமா, டி.டி.வி-யை முழுமையாக எதிர்க்கலாமா என்பதுகுறித்து எந்த முடிவையும் எடப்பாடி தீர்மானிக்கவில்லை. அது, மத்திய பா.ஜ.க-வின் கருத்தாகவே அமைந்திருக்கிறது.  கட்சிக்கும் தனக்கும் முழுமையான பலம், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க கேட்கும் 'சீட்' ஒதுக்கீடு போன்றவைகளை கணக்குப் போட்டே எடப்பாடி  சீரியஸாக நகர்ந்து கொண்டிருக்கிறார். எடப்பாடியின் சிக்னலைப் பொறுத்தே ஆங்காங்கே  ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம்  ஈ.பி.எஸ் ஆதரவுத் தரப்புகள் மோதி வருகின்றன. டி.டி.வி. ஆதரவாளர்களுடன் மோதுவதே இல்லை. டி.டி.வி-யின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, டி.டி.வி. ஆதரவாளர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையே இப்போது வேகம்பிடித்திருக்கிறது.  எடப்பாடி தரப்பில் நடக்கும்   அத்தனை விவகாரங்களும் நிமிடத்துக்கு நிமிடம், டி.டி.வி.தினகரன் கவனத்துக்குப் போய்ச் சேர்ந்துவிடுகிறது. டி.டி.வி.தினகரன் பக்கம் உள்ள ஒரு மாவட்டச் செயலாளரை இழுக்க எடப்பாடி தரப்பு காய் நகர்த்திய சில மணித்துளிகளில், ஆளுங்கட்சியின் ஒரு எம்.எல்.ஏ., டி.டி.வி.தினகரன் பக்கம் போய்விட்டார். ஓ.பி.எஸ் தரப்பை, டி.டி.வி. தினகரன் ஏற்பதற்கு, 30 சதவிகிதம் பேர் எதிர்ப்பு என்றால், எடப்பாடி அணியை ஏற்பதற்கு 100 சதவிகிதம் பேர் எதிர்ப்பைக் காட்டிவருகிறார்கள்.

எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் ஒரே அணியாகச் செயல்பட்டால், மோடியைப் பார்த்தோ,  தினகரனைப் பார்த்தோ பயப்படத் தேவையில்லை. 'நான்தான் நிஜமான தலைவர்... நிஜமான முதல்வர்' என்று இருவருமே மோதிக்கொண்டிருப்பதும், இவர்களின் சண்டையை அமைச்சர்களில் சிலரும், மாவட்டச் செயலாளர்களில் சிலரும் தூண்டிவிட்டுக்கொண்டிருப்பதும் டி.டி.வி. தினகரனுக்கே சாதகமாக அமையும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. டி.டி.வி. தினகரனிடம் ஆட்சி இல்லை என்பது அவருக்கு இருக்கும் பெரிய பலம். 'எனக்கு ஆட்சி வேண்டாம், கட்சியை மட்டும் என் கையில் கொடுங்கள், நான் அதை வலுவாக்கிக்காட்டுகிறேன்' என்று  தினகரன் சொல்லிக்கொண்டிருப்பது, தொண்டர்களிடம் எடுபடத் தொடங்கியுள்ளது. தினகரன் கையில் கட்சி போய்விட்டால், பா.ஜ.க-வின் எந்த முயற்சியும் எடுபடாது என்பதால்தான், கோட்டையில் படத் திறப்புக்கு வராத பிரதமர், ஸ்கூட்டர் வழங்கும் விழாவுக்கு ஓடோடி வந்து பஞ்சாயத்து செய்துவிட்டுப் போயிருக்கிறார். பஞ்சாயத்தின்மூலம் யார் கை உயர்ந்துள்ளது, பஞ்சாயத்து நடுநிலையாகத்தான் நடந்ததா... எப்படி? என்பதெல்லாம், இரண்டொரு நாளில் வெளிச்சத்துக்கு வந்துவிடும்" என்றனர்.
 


டிரெண்டிங் @ விகடன்