`பெண்களால் இயக்கப்படும் நாட்டின் முதல் நகர்ப்புற ரயில் நிலையம்!’ - ராஜஸ்தானில் அசத்தல்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் நகரில் உள்ள நகர்ப்புற ரயில் நிலையம் ஒன்றை பெண்களே தங்களது கட்டுப்பாட்டில் இயக்கி, சாதனை படைத்துவருகின்றனர்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில், வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்துவருகிறது. இங்கு, ஜெய்ப்பூர் நகரில் உள்ள காந்தி நகர் ரயில் நிலையத்தை, முற்றிலும் பெண்களின் கட்டுப்பாட்டில் செயல்படுத்தும் திட்டம், அந்த மாநில அரசின் உதவியோடு செயல்படுத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் இந்த ரயில் நிலையத்தைக் கடந்துசெல்கின்றன. சுமார் 7,000-க்கும் அதிகமான பயணிகள் தினசரி வந்துசெல்லும் இந்த ரயில்நிலையத்தை இயக்கும் பொறுப்பில் 40 பெண்கள் உள்ளனர். 

நீலம் ஜாதவ் என்கிற பெண் ஊழியர், காந்தி நகர் ரயில் நிலயத்தின் முதல் பெண் ரயில் நிலைய கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். மூன்று கால சுழற்சி வீதம் 8 மணி நேரம், 40 பெண்கள் இந்த ரயில்நிலையத்தில் வேலை செய்கின்றனர். 
பயணிகளுக்கு பயணச்சீட்டு கொடுப்பது முதல் பயணச்சீட்டை பரிசோதிப்பது வரை அனைத்து வேலைகளையும் பெண் அதிகாரிகள் செய்கின்றனர். நான்கு பெண்கள் ரயில்களை இயக்கும் பொறுப்பிலும், எட்டுப் பெண்கள் பயணச்சீட்டு பதிவுப் பிரிவிலும், ஆறு பெண்கள் பயணச்சீட்டு முன்பதிவுப் பிரிவிலும் வேலை செய்கின்றார்கள். 

மேலும், 6 பேர் பயணச்சீட்டு பரிசோதகர் மற்றும் ரயில் வருகை அறிவிப்புகளைத் தெரிவிப்பவர்களாகவும் பணி செய்கின்றனர். 10 பேர் ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவிலும், மீதம் இருப்பவர்கள் இதர வேலைகளைச் செய்யவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய ரயில்வே அமைச்சகத்தின் உதவியோடு, ராஜஸ்தான் மாநில அரசு இணைந்து இந்த முயற்சியில் வெற்றிகண்டுள்ளது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!