உத்திரமேரூர் காப்பகத்தில் அதிகாரிகள் மீண்டும் ஆய்வு! முதியோர்களை சொந்த ஊருக்கு அனுப்ப திட்டம்? | Suspicion triggers tension in Kancheepuram Old age home

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (26/02/2018)

கடைசி தொடர்பு:13:00 (26/02/2018)

உத்திரமேரூர் காப்பகத்தில் அதிகாரிகள் மீண்டும் ஆய்வு! முதியோர்களை சொந்த ஊருக்கு அனுப்ப திட்டம்?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செயின்ட் ஜோசப் முதியோர் கருணை இல்லம் ஒன்றில், முதியவர்கள் கடத்தப்படுவதாகவும், அவர்களை முறையாகப் பராமரிப்பது இல்லை எனவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அந்த கருணை இல்லத்தை ஆய்வுசெய்தனர். இதனிடையே, பல்வேறு இயக்கங்களும் அரசியல் பிரமுகர்களும் அந்த கருணை இல்லத்தை முழுமையாகச் சோதனை செய்ய வலியுறுத்தியிருக்கிறார்கள். இந்த நிலையில், கோட்டாட்சியர் ராஜீவ் தலைமையில், இன்று மீண்டும் கருணை இல்லத்தில் ஆய்வு நடந்துவருகிறது.

உத்திரமேரூர் செயின்ட் ஜோசம் கருணை இல்லம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரம் கிராமத்தில், செயின்ட் ஜோசப் ஹாஸ்பைப் என்னும் முதியோர் கருணை இல்லம் செயல்பட்டுவருகிறது. இந்த முதியோர் இல்லத்துக்கு வருபவர்கள், சில நாள்களிலேயே இறந்துவிடுகிறார்கள். இறந்தவர்களின் உடலைப் புதைப்பதில்லை. அவர்களின் எலும்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்துவிடுகிறார்கள். மேலும் முதியோர்களை சரிவர பராமரிப்பு செய்வது கிடையாது என அப்பகுதி மக்கள் போரட்டம் நடத்தியதன் விளைவாக, மறுநாள் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜீவ், உத்திரமேரூர் வட்டாட்சியர் அகிலாதேவி மற்றும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சங்கீதா உள்ளிட்ட  ஆறு துறைகளைச் சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியரிடம் அந்த ஆய்வறிக்கை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் சார்பில், காப்பக நிறுவனத்துக்கு ஏற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 133 (பி)-ன்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், உங்களால் நடத்தப்பட்டுவரும் காப்பகத்தால், அதில் உள்ளவர்களுக்கும் பிற ஆதரவற்ற நபர்களுக்கும், சுற்றி அமைந்துள்ள கிராமப் பொதுமக்களுக்கும், அவர்களின் பொது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு ஊறு விளைவிப்பதாக உள்ளது.

உத்திரமேரூர் முதியோர் காப்பகம்

அதைத் தடுக்க வேண்டும் என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உரிய அனுமதி இல்லாத இந்த காப்பகத்தை ஏன் தடை செய்யக்கூடாது? என்ற கேள்வியுடன் அதற்கான விளக்கத்தை ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்கள். இதைத் தொடர்ந்து, இன்று வருவாய் கோட்டாட்சியர் ராஜீவ் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு தங்கியுள்ளவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். விருப்பம் இல்லாமல் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப அதிகாரிகள் முடிவுசெய்துள்ளதாகவும், அதற்காக அங்கு தங்கியுள்ளவர்களின் கருத்தை அதிகாரிகள் கேட்டுவருவதாகவும் தெரியவருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க