வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (26/02/2018)

கடைசி தொடர்பு:12:37 (26/02/2018)

' கல்லீரல் ஃபெயிலியர்; கிட்னியும் வேலை செய்யல!'  - பினு, ராதாகிருஷ்ணன் வரிசையில் வியாசர்பாடி நாகேந்திரன்

வியாசர்பாடி நாகேந்திரன்

சென்னையில் நடக்கும் பெரும்பாலான கொலைகளில் வியாசர்பாடி நாகேந்திரனின் பின்புலத்தை விசாரிப்பது போலீஸாரின் வழக்கங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. ' என் கணவரைத் தவறான கண்ணோட்டத்திலேயே போலீஸார் பார்க்கின்றனர். கல்லீரல் செயலிழந்து அவர் திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்' என்கிறார் அவரது மனைவி விசாலாட்சி. 

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் அமைந்துள்ள மலையம்பாக்கத்தில் ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 75 ரவுடிகள் வகையாகச் சிக்கினர். ரவுடிகளுக்குள் ஏற்பட்ட உள்மோதலின் விளைவாகவே மொத்த ரவுடிகளும் சிக்கியதாகத் தகவல் வெளியானது. அரிவாளால் கேக் வெட்டிய பினு, ஒருகட்டத்தில் அம்பத்தூரில் போலீஸில் சரண் அடைந்தார். ' நான் ஒரு சுகர் பேஷண்ட். எந்தச் சம்பவத்திலும் ஈடுபடுவது கிடையாது. அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த என்னை, பிறந்தநாள் கொண்டாடலாம் என வரவழைத்தனர். ஒருகாலத்தில் நான் தவறான காரியங்களில் ஈடுபட்டது உண்மை' என வாட்ஸ்அப் வீடியோவில் கதறியிருந்தார் பினு. அடுத்து வந்த நாள்களில் பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் சரணடைந்தார். போலீஸாரின் ரவுடி ஒழிப்பு ஆப்ரேஷன் தீவிரமடைந்து வரும் சூழலில், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் வியாசர்பாடி நாகேந்திரன்.

வியாசர்பாடி நாகேந்திரன்நாகேந்திரனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து நம்மிடம் பேசிய அவரது குடும்ப உறவினர் ஒருவர், " இரண்டு கிட்னியும் செயழிந்துவிட்டன. கல்லீரல் முற்றிலும் பழுதடைந்துவிட்டது. இதனையடுத்து, தொடர் சிகிச்சை பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தி, வேலூர் சிறைக் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தார் நாகேந்திரன். இந்த மனுவின் மீது எந்த முடிவையும் சிறைத்துறை எடுக்கவில்லை. அடுத்ததாக, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மருத்துவமனைக் கண்காணிப்பில் இருக்கிறார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்" என்றார். அவரது மனைவி விசாலாட்சியோ, " என் கணவர் திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் தவறு செய்கிறார் எனப் போலீஸார்தான் தொடர்ந்து கூறி வருகின்றனர். எந்தத் தவறான காரியத்திலும் அவர் ஈடுபடுவது கிடையாது. அவரது உடல்நிலையைக் கவனத்தில் கொண்டாவது, அரசு விடுதலை செய்ய வேண்டும்" என்றார் வேதனையுடன். 

ஆனால், காவல்துறை வட்டாரமோ நாகேந்திரன் மீதான பிடியை அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை. " நாகேந்திரனின் செயல்பாடுகளை அவ்வளவு எளிதில் முடக்கிப் போட்டுவிட முடியாது. இன்றளவும் வடசென்னையில் அவர் வைத்ததுதான் சட்டம். அவருக்குப் பயந்து மாதம்தோறும் கணக்கு வழக்கில்லாமல் மாமூல் கொடுக்கும் தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். பல கொலைச் சம்பவங்களுக்கு சிறையில் இருந்தபடியே அவர் போட்டுக் கொடுக்கும் திட்டங்கள்தான் காரணம். பினுவுக்குப் பிறகு தன்னை போலீஸார் எதுவும் செய்துவிடக் கூடாது என அஞ்சித்தான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்" என விவரித்த காவல்துறை அதிகாரி ஒருவர், " பெங்களூருவில் வைத்து வெள்ளை ரவியின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது தமிழக போலீஸ். வெள்ளை ரவியின் மூச்சு அடங்கிய நொடியில் இருந்து தலையெடுக்க ஆரம்பித்தார் வியாசர்பாடி நாகேந்திரன். கொலை, கொள்ளை, மாமூல் என பலப் பெருமைகள் நாகேந்திரனுக்கு உண்டு. இவர் மீது இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளில் பலவற்றில் விடுதலை ஆகிவிட்டார். கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 

வியாசர்பாடி, கொடுங்கையூரைப் பொறுத்தவரையில் ரவுடிகளுக்குள் ஏற்படும் மாமூல் தகராறுதான் பல கொலைகளுக்குக் காரணமாக அமைகின்றன. கொருக்குபேட்டை கூட்ஷெட் எடுக்கும் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட தகராறில், இந்திய குடியரசு கட்சியின் சென்னை மாவட்ட தலைவர் பாளையம் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையின் பின்புலத்தில் நாகேந்திரனின் தொடர்பு பற்றி அனைவரும் அறிவார்கள். ரஞ்சித், ‘பாட்டில்’ மணி, காமேஷ், பிரபாகரன், டைசன், பாளையம் என உள்மோதலில்  கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகம். வேலூர் சிறைக்குள் இருந்தபடியே நாகேந்திரன் போட்டுக் கொடுக்கும் திட்டப்படிதான் கொலைகள் நடப்பதாக, உளவுத்துறை போலீஸார் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வந்தனர்.  

பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவரின் நண்பரான தென்னரசு கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் இருந்த நாகேந்திரன் மீது 120 பி எனப்படும் கூட்டுச் சதி வழக்கு போடப்பட்டது. கொருக்குப் பேட்டை கூட்செட் மாமூலில் ஏற்பட்ட தகராறில் ஜெய்சிங் என்பவர் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக நாகேந்திரனின் தம்பி போஸ் கொல்லப்பட்டார். போஸ் படுகொலையின் பின்னணியில் சில தவறான தொடர்புகளும் சுட்டிக் காட்டப்பட்டன. இன்றளவும் நாகேந்திரன் பெயரைச் சொல்லித்தான் அவரது ஆதரவாளர்கள் வலம் வருகின்றனர். இன்று தனியார் மருத்துவமனையில் பெரும் பொருள்செலவில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். நாகேந்திரன் சிறையில் இருப்பதும் ஒன்றுதான். வெளியில் இருப்பதும் ஒன்றுதான். எந்தவிதச் சிரமமும் இல்லாமல் அவருடைய மாமூல் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது" என்றார் விரிவாக. 

" பினு, அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் கைது சம்பவங்களுக்குப் பிறகு நாகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதே தவறான தகவல். கடந்த ஓராண்டாகவே கல்லீரல் சிகிச்சைக்கான அனுமதிக்காக சிறைத்துறை அதிகாரிகளிடம் போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு எந்த அனுமதியும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் சில அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். பினு கைதுக்கும் நாகேந்திரன் சிகிச்சைக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை" என்கின்றனர் அவரது உறவினர்கள். 


டிரெண்டிங் @ விகடன்