வக்பு வாரியத் தேர்தல் திடீர் ரத்து ஏன்? - முட்டல் மோதலில் அ.தி.மு.க-வினர் 

வக்பு வாரியம்

 தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க-வினரின் முட்டல், மோதலே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 


தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த தமிழ்மகன் உசேனுக்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். உடனடியாக வக்பு வாரியத் தலைவர் பதவியைத் தமிழ்மகன் உசேன் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடத் தயாரானார். ஆனால், சில காரணங்களுக்காகத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. அதன்பிறகு, வக்பு வாரியத்துக்கு புதிய தலைவராக யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால், வக்பு வாரிய  நிர்வாகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, வக்பு வாரியத்துக்கு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடந்தன. எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், சமூக ஆர்வலர், முத்தவல்லிகள், வழக்கறிஞர்கள் என 11 பேர் உறுப்பினர்கள்  நியமிக்கப்பட்டனர். இவர்கள் மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இதற்கான தேர்தல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தலைவர் பதவிக்குக் காயை நகர்த்திய இரண்டு சீனியர் அ.தி.மு.க-வினரின் முட்டல், மோதலே காரணம் என்று சொல்லப்படுகிறது. 

 இதுகுறித்து வக்பு வாரிய வட்டாரங்கள் கூறுகையில், "தமிழ்நாடு வக்பு வாரியத்தில் உள்ள 11 உறுப்பினர்களில், சமூக சேவகர் என்ற அடிப்படையில் தமிழ்மகன் உசேனை உறுப்பினராகத் தமிழக அரசு நியமித்தது. அதுபோல எம்.பி என்ற அடிப்படையில் அன்வர்ராஜாவும் உறுப்பினராக இருக்கிறார். வக்பு வாரியத்தில் கட்சிகள் அடிப்படையில் நான்கு உறுப்பினர்கள் தி.மு.க-விடமும் அ.தி.மு.க-வுக்கு ஏழு உறுப்பினர்களும் உள்ளனர். இதனால், தேர்தல் நடந்தால், அ.தி.மு.க-வினர் எளிதில் வெற்றி பெறலாம் என்ற சூழல் நிலவுகிறது. தலைவர் பதவியைப் பெற அன்வர்ராஜா எம்.பி-க்கும் தமிழ்மகன் உசேனுக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. 

தமிழ்மகன் உசேன், அன்வர்ராஜா

 வக்பு வாரியத் தலைவராக யாரை ஜெயலலிதா கை காட்டுகிறாரோ அவர்தான் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் வக்பு வாரியத் தலைவர் பதவிக்கு யாரையும் கைகாட்ட முடியவில்லை. இதனால், தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டது. தேர்தல் என்றதும் அன்வர்ராஜா, தமிழ்மகன் உசேன் தரப்பினர் உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதனால், தற்காலிகமாகத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது" என்றனர். 

 தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்தநிலையில் வக்பு வாரியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஒருவர், தனக்குக் கிடைக்கவில்லையென்றால் டி.டி.வி.தினகரனை ஆதரித்துவிடுவதாக அ.தி.மு.க தலைமையை மிரட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்னொருவர், கட்சியின் சீனியரான எனக்கு எந்தப் பதவியும் இல்லை என்று முதல்வர், துணை முதல்வர் ஆகியோரைச் சந்தித்து முறையிட்டுள்ளார். வக்பு வாரியத் தலைவர் பதவியால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு இடையே கடும் மோதல் உருவாகியுள்ளது. இந்தப் பதவியால், மீண்டும் அ.தி.மு.க-வில் பிளவு ஏற்படுவதைத் தவிர்க்க கட்சித் தலைமை நிர்வாகிகள் சாதுர்யமாகக் காய் நகர்த்திவருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

எம்.பி பதவி முடிந்த பிறகும் வக்பு வாரியத் தலைவர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்று அன்வர்ராஜா எம்.பி தரப்பினர் கருதுகின்றனர். வக்பு வாரியத் தலைவராக அன்வர்ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டால், அவருக்கு இரண்டு இடங்களில் அரசு ஊதியம் பெறும் சூழல் ஏற்படும். அடுத்து, எம்.பி பதவி முடிந்ததும் அவரால் தலைவர் பதவியைத் தொடருவதிலும் சிக்கல் எழலாம் என்று தமிழ்மகன் உசேன் தரப்பில் கட்சித் தலைமையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வக்பு வாரியத் தலைவர் பதவியை அன்வர்ராஜா விட்டுக்கொடுத்தால் அடுத்து அ.தி.மு.க சார்பில் நியமிக்கப்படவுள்ள ராஜ்யசபா எம்.பி பதவியில் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அன்வர்ராஜா தரப்பில் கட்சித் தலைமையிடம் வைக்கப்பட்டுள்ளதாம். இதுதொடர்பான ஆலோசனையில் கட்சித் தலைமை ஈடுபட்டு வருவதாக கட்சியின் உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. வக்பு வாரியத் தலைவர் பதவிக்கு ஏற்பட்டுள்ள கடும் போட்டிக்கு மதுரையில் வக்பு வாரியக் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரியில் சில பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதே முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!