வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (26/02/2018)

கடைசி தொடர்பு:17:33 (26/02/2018)

உத்திரமேரூர் காப்பகத்திலிருந்து முதியோர்கள் வேறு இடத்துக்கு மாற்றம்!

உத்திரமேரூர் அருகே உள்ள செயின்ட் ஜோசப் முதியோர் காப்பகத்தில் உள்ளவர்களை வேறு முதியோர் இல்லங்களுக்கு மாற்றும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இன்று காலையிலிருந்து அதிகாரிகள் அங்கு தங்கி இரண்டாம் கட்டமாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

செயின்ட் ஜோசப் முதியோர் இல்லம் உத்திரமேரூர்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள செயின்ட் ஜோசப் முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பவர்களுக்கு சுகாதாரமான உணவு மற்றும் போதிய மருத்துவ வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அங்குள்ளவர்கள் விரும்பம் இல்லாமல் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அங்குள்ளவர்களை, அரசு அனுமதி பெற்ற வேறு முதியோர் இல்லங்களுக்கு மாற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். இதனால் செயின்ட் ஜோசப் முதியோர் காப்பகத்தில் தங்கியுள்ள 300-க்கும் மேற்பட்டவர்களிடம் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு தங்க வைக்கப்பட்டிருப்பவர்களில் 20 பேர் இன்று மதுராந்தகம், தொழுப்பேடு உள்ளிட்ட அருகில் உள்ள காப்பகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். உடல்நலம் சரியாக இருப்பவர்களின் உறவினர்களின் தொலைபேசி எண் வாங்கப்பட்டு அவர்களிடம் தொடர்புகொண்டு அதிகாரிகள் பேசிவருகிறார்கள்.

“ஏற்கெனவே உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள்தாம் இங்கு தங்கி இருக்கிறார்கள். அவர்களை மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைப்பதால் முதியவர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் எனக் குறிப்பட்ட கால இடைவெளியில் அதிகாரிகள் தொடர்புகொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்“ என்கிறார்கள். உறவினர்களின் விருப்பத்துக்கேற்ப அவர்களை உரிய முகவரிக்கு அனுப்பும் பணி தொடர்ந்து வருகிறது. சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை ஆகிய நான்கு துறையைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலையிலிருந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இதனியையே கிறிஸ்துவ அமைப்புகள் போராட்டத்தில் இறங்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியிருப்பதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க