வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (26/02/2018)

கடைசி தொடர்பு:16:05 (26/02/2018)

ஜெயலலிதா பிறந்தநாளா... நினைவு நாளா? - அ.தி.மு.க-வினரின் ஃப்ளெக்ஸால் களேபரம்

ஜெயலலிதா பிறந்த நாளை நினைவு நாளாகக் கொண்டாடிய ஜெயங்கொண்டம் அ.தி.மு.க-வினர். இந்தச் செயலால் அரியலூர் அ.தி.மு.க-வில் பல்வேறு பிரச்னைகள் நிலவிவருகிறது.


ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள் அ.தி.மு.க-வினர். அந்த வகையில் அரியலூர் மாவட்டம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று கொறடா தாமரை ராஜேந்திரன் உத்தரவு போட்டதால். போட்டிப்போட்டுக்கொண்டு அவரவர் ஃப்ளெக்ஸ் போர்டுகளை வைத்து அசத்தினார்கள்.

                  


ஆனால், ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவுக்கென்று  ஃப்ளெக்ஸ் பேனரை வைக்காமல், முதலாம் ஆண்டு நினைவு தின ஃப்ளெக்ஸ் பேனரை வைத்து மாலை அணிவித்து பத்திரிகைகளுக்குப் பேட்டியும் கொடுத்தனர். பின்பு எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கிக்கொண்டிருந்தபோது. தட்டுவண்டி ரிக்‌ஷா ஓட்டும் பெரியவர், `அண்ணே அம்மாவோட பிறந்தநாள் விழாவுக்குப் போய் நினைவு நாள் பேனர் வைத்துக்கொண்டாடுகிறீர்களே. அம்மா பிறந்த நாளா இல்லை இறந்த நாளா' என்று கேட்க... பதறிப்போன அ.தி.மு.க-வினர் செய்தி எடுத்துச் சென்ற பத்திரிகையாளர்களிடம் போனைபோட்டு அந்தச் செய்தியைப் போட வேண்டாம் என்று எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார்கள்.

 

ஆளாளுக்கு போட்டிப்போட்டுக்கொண்டு அவர்களது போட்டோவை போட்டு ஃப்ளெக்ஸ் வைப்பதிலேயே குறியாக இருந்தார்களே தவிர, அம்மாவுக்கு ஒரு ஃப்ளெக்ஸ் அடிக்கிறோம் என்று தெரியவில்லையா, ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கும் இறந்த நாளுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்களே அ.தி.மு.க-வினர் என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் ஜெயங்கொண்டம் மக்கள்.
இவர்களின் செயலைப் பார்த்து ஊர், உலகமே சிரித்துக்கொண்டிருக்கிறது.