``எனக்கு மன உளைச்சலா இருக்கு'' - சண்டிகரில் மர்ம மரணம் அடைந்த தமிழக மருத்துவ மாணவரின் கடைசி வாக்குமூலம்

சண்டிகரில் செயல்பட்டு வரும் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (PGIMER) மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த தமிழ் மாணவர் கிருஷ்ண பிரசாத் என்பவர் விடுதி அறையில் மர்மமாக மரணமடைந்துள்ளார். 

PGIMER student

கிருஷ்ண பிரசாத்

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத், கடந்தாண்டு நவம்பரில் மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்-ல் M.D General medicine துறையில் சேர்ந்தார். இந்நிலையில் இன்று காலை கல்லூரி விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உடல் மீட்கப்பட்டு இருக்கிறது. என்ன நடந்தது என்பது குறித்து அதே கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் தமிழ் மாணவர் ஒருவரை தொடர்புகொண்டு பேசினோம்.

"கிருஷ்ண பிரசாத் கடந்தாண்டு நவம்பரில் இங்கு சேர்ந்தார். அவரின் தந்தை என்னை சந்தித்து கல்லூரி குறித்து விசாரித்தார். கல்லூரியில் சேர்ந்து 10 நாள்களில் `எனக்கு மன உளைச்சலா இருக்கு. இந்தி தெரியல. என்னால் இங்கு படிப்பைத் தொடர முடியுமான்னு தெரியல’ என்று பிரசாத் என்னிடம் கலங்கினார். நானும் தைரியம் கொடுத்தேன். ஆனால், அவர் மறுநாளே ஊருக்குப்போவதாகச் சொல்லி விமான நிலையம் புறப்பட்டார். நானும் என் நண்பர்கள் சிலரும் அவருக்குத் தைரியம் கொடுத்து விமான நிலையத்திலிருந்து விடுதிக்கு அழைத்து வந்தோம். அதன்பிறகு அவர் கவுன்சலிங் மூலம் வேறு பிரிவுக்கு மாறிவிட்டார்.

பிரசாத் தனி விடுதி அறைக்குச் சென்றுவிட்டதால், அவரை சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு அமையவில்லை. இன்று காலை பிரசாத்தை நான்கு நாள்களாகக் காணவில்லை என்று தகவல் பரவியது. இதையடுத்து பிரசாத்தின் துறைப் பேராசிரியர்கள் அவரின் விடுதி அறையை உடைத்துப் பார்த்தனர். பிரசாத் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அவரின் மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இங்கு படிக்கும் தமிழ் மாணவர்கள் அனைவருக்குமே மன அழுத்தம் அதிகம்தான். முதுநிலை மருத்துவப் பயில்வதால் பேராசிரியர்களுடன் மற்ற மாணவர்களுடனும் கலந்துரையாடுவது அவசியம். ஆனால் வட மாநிலங்களில் படிக்கும் எங்களை போன்ற தமிழக மாணவர்களுக்கு மொழி எப்போதுமே தடையாக இருக்கிறது. எங்களுக்கு இந்தி தெரியாது என்ற ஒரே காரணத்தால் இங்கு பிழைப்பது ரொம்பவே கடினமாக உள்ளது. நான் பிரசாத்தைக் கடைசியாகப் பார்த்தபோது அவர் சொன்னதும் இதைத்தான். பிரசாத்துக்கு என்ன நடந்தது. அவர் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் நடந்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது’' என்றார். 

டெல்லி மருத்துவக் கல்லூரியில் மர்ம மரணமடைந்த திருப்பூரைச் சேர்ந்த சரத்பிரபு, டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் மர்மமாக இறந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் வரிசையில் தற்போது ராமேஸ்வரத்தை சேர்ந்த கிருஷ்ண பிரசாத்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!