வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (26/02/2018)

கடைசி தொடர்பு:17:40 (26/02/2018)

நிர்வாகிகளைப் பாதுகாக்க ரஜினியின் புதுத்திட்டம் 

புதுச்சேரியில் நடந்த ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டம்

 ரஜினி மக்கள் மன்றத்தினரின் பாதுகாப்புக்காகத் தனி செல்போன் நம்பர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  
 
புதுச்சேரி மாநில ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் பொறுப்பாளர் ரஜினிசங்கர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் புதுவையில் அமைந்துள்ள 540 கிளை மன்றங்களில் உள்ள உறுப்பினர்கள், தங்களின் குடும்பத்தினரை முதல்கட்டமாக உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். தொகுதி முழுவதும் ரஜினி மக்கள் மன்றச் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும். புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்புத் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த வேண்டும். ரஜினி மக்கள் மன்றத்தின் உறுப்பினர்களுக்கு அவர்களுடைய நிலைப்பாடுகளைக் கருத்தில்கொண்டு பாதுகாப்புத் தருவதென்று முடிவெடுக்கப்பட்டு அதற்கென்று தனியாக, செல்போன் எண் அறிமுகப்படுத்தப்படும்.  

 30 சட்டமன்றத் தொகுதிகளிலும் புகார் பெட்டி, மன்றத்தின் சார்பில் வைக்க வேண்டும். தலைமை மக்கள் மன்ற நிர்வாகிகள், தொகுதிச் செயலாளர்கள், கிளை மன்ற நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதுகுறித்து ரஜினிசங்கர் கூறுகையில், "அரசியல் கட்சித் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்துவருகின்றன. அதற்குமுன், உறுப்பினர்கள் சேர்க்கை நடந்துவருகிறது. அதில், மன்ற நிர்வாகிகளின் பாதுகாப்புக்காக 95976 83334 என்ற செல்போன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புக்கான தனி டீம் உருவாக்கப்பட்டுள்ளது. மன்ற நிர்வாகிகளுக்குப் பிரச்னை என்றால் அறிவிக்கப்பட்டுள்ள செல்போன் நம்பரில் தொடர்புகொண்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியை நான்கு மண்டலமாகப் பிரித்து ஒரு மண்டலத்துக்கு 9 பேர் பாதுகாப்பு டீமில் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களைக் கண்காணிக்க 4 தலைவர்கள் இருப்பார்கள். எனவே, பாதுகாப்பு டீம், 40 பேருடன் செயல்படவுள்ளது" என்றார்.