வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (26/02/2018)

கடைசி தொடர்பு:16:26 (26/02/2018)

"நாராயணசாமி பற்றி அப்படியென்ன சொல்லிவிட்டார் மோடி?" - நியாயப்படுத்தும் தமிழிசை!

பிரதமர் மோடி

புதுச்சேரிக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திரமோடி, பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் காங்கிரஸ் கட்சியை வம்புக்கு இழுத்துள்ளார். பிரதமரின் இந்தப் பேச்சுக்கு புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த பி.ஜே.பி. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பிரதமர் என்ற முறையில் கட்சிப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் பற்றி கருத்துக் கூற அவருக்கு உரிமையுண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுவை பொதுக்கூட்டத்தில், "ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஹரியானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தல்களில் பி.ஜே.பி. வெற்றிபெறும்" என்று தெரிவித்ததோடு பிரதமர் மோடி நிறுத்திக் கொண்டிருந்தால் எந்த சர்ச்சையும் உருவாகியிருக்காது. ஆனால், "வரும் ஜூன் மாதத்திற்குப் பிறகு, நாராயணசாமி மட்டும்தான் காங்கிரஸ் முதலமைச்சராக இருப்பார். அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற பி.ஜே.பி பொதுக்கூட்டத்தில் மோடி அப்படி என்னதான் பேசினார்?

48 மாதங்களில் பி.ஜே.பி. சாதனை!

"நாட்டை 48 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் கட்சி செய்யத் தவறியவற்றை, 48 மாதங்களில் பி.ஜே.பி. அரசு செய்து முடித்திருக்கிறது. இந்தியாவுக்குப் பின்னர் சுதந்திரம் பெற்ற பல்வேறு நாடுகள் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், நமது நாடு மட்டும் முன்னேற்றமடையாமல் போனதற்குக் காங்கிரஸ் கட்சியே காரணம். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 17 ஆண்டுகளும், அவரது மகள் இந்திரா காந்தி 14 ஆண்டுகளும் தொடர்ச்சியாக இந்தியாவில் ஆட்சி நடத்தினர். 2004 முதல் 2014-ம் ஆண்டுவரை நேருவின் குடும்பத்தினர், 'ரிமோட் கன்ட்ரோல்' ஆட்சி நடத்தினர். இந்தியாவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 48 ஆண்டுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அவர்கள் செய்யாத சாதனைகளை, 48 மாதங்களில் பி.ஜே.பி அரசு செய்து முடித்துள்ளது. வரும் ஜூன் மாதத்திற்குப் பின்னர், காங்கிரஸ் முதலமைச்சர் எனச் சுட்டிக்காட்டுவதற்கு புதுச்சேரி முதலமைச்சர் மட்டுமே இருப்பார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்" என்றார்.

மேலும், "புதுச்சேரி மாநில வளர்ச்சிக்குக் கடந்த 10 ஆண்டுகளாக தடைகள் உள்ளன. இங்கு ஆட்சியில் இருப்பவர்கள், இம்மண்ணிற்கு அநியாயம் இழைத்திருக்கிறார்கள். ஜவுளித்துறையில் செழித்துக்கொண்டிருந்த புதுச்சேரி, காங்கிரஸ் ஆட்சியில் தன் மினுமினுப்பை இழந்துவிட்டது. புதுவை பி.ஜே.பி. நியமன எம்.எல்.ஏ-க்களை ஜனநாயகக் கடமை செய்ய விடாமல் தடுப்பது ஏன்? புதிய புதுச்சேரி பிறந்தால் மட்டுமே புதிய இந்தியா பிறக்கும்" என்று மோடி பேசினார்.

பிரதமருக்கு நாராயணசாமி கண்டனம்!

நாராயணசாமி - புதுவை முதல்வர்மோடியின் இந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து புதுவை முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டியில், "சரித்திரம் தற்போது மாறி வருகிறது; இதை பிரதமர் மோடி புரிந்துகொள்ள வேண்டும். கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் மட்டுமல்ல; எந்தக் கட்சிக்கும் வெற்றி, தோல்வி என்பது சகஜமானதுதான். யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது பிரதமர் முடிவு செய்ய வேண்டியது அல்ல. மக்கள்தான். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் வைத்துள்ளேன்" என்றார்.

காங்கிரஸை குறைகூறி பிரதமர் பேசிய உரை, அதற்கு நாராயணசாமி கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி பி.ஜே.பி-யின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பேசினோம்.

தமிழிசை கருத்து !

"ஒரு மாநிலத்தின் முதல்வர் யார் என்பதைத் தேர்தல்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்வது உண்மைதான். பின் என்ன காங்கிரஸ்காரர்களா முடிவு செய்வார்கள்? பிரதமர் ஒரு அரசியல் கட்சி மேடையில், பி.ஜே.பி. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, புதுச்சேரி பற்றிக் குறிப்பிட்டார். கடந்த 50 வருஷமாக புதுச்சேரியை அதிக முறை ஆட்சி செய்த கட்சி காங்கிரஸ். புதுச்சேரியில், கடந்த காலங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கு. எதிர்பார்த்த அளவுக்குப் புதுச்சேரி வளர்ச்சியடையவில்லை. புதுச்சேரியின் வளர்ச்சிக்காக, காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோதுகூட இந்தளவு நிதி வழங்கப்படவில்லை. ஆனால்,  தற்போதைய பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசு என்னென்ன திட்டங்களையெல்லாம் வழங்கியிருக்குன்னு பிரதமர் தன் உரையில் சொன்னார். புதுச்சேரியின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 1,800 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனை மேம்பாட்டிற்காக 400 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இவையெல்லாம் புதுச்சேரி மக்களுக்கான திட்டங்களே. இதனால் பலனடையப் போவது புதுச்சேரி மக்கள்தான். புதுச்சேரியைப் பொறுத்தவரை ஒரு ஒதுக்கப்பட்ட மாநிலமாக இருக்கு. 'புதிய புதுச்சேரியைப் படைப்போம்' என்கிறார் பிரதமர். 

தமிழிசை சவுந்தரராஜன்பிரதமரின் பேச்சுக்கு முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பொதுக்கூட்டத்தில் தெரிவிப்பதற்கான அத்தனை உரிமையும் பிரதமருக்கு உண்டு. ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகளை மட்டும் வைத்து பொதுத்தேர்தல் இருக்கும் என்று பார்க்கக் கூடாது. அப்படியானால் 19 மாநிலங்களில் பி.ஜே.பி. ஆட்சி செய்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் இன்றைக்கு வந்துள்ள முடிவுகூட பி.ஜே.பி-க்கு ஆதரவாகவே உள்ளது. எல்லா மாநிலங்களிலுமே பி.ஜே.பி-க்குச் சாதகமான நிலையே உள்ளது. எதிர்வரும் பல்வேறு மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களிலும் பி.ஜே.பி-யே வெற்றிபெறும்; எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் போகும் சூழல் உள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனடிப்படையில்தான், காங்கிரஸ் முதல்வர் என்று சொல்வதற்கு நாராயணசாமி மட்டும்தான் இருப்பார் என்றார் பிரதமர். காங்கிரஸ் கட்சி குறித்து பிரதமர் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. எதிர்வரும் தேர்தலை வலிமையுடன் சந்திக்கப்போகும் ஒரு கட்சி, தன் நம்பிக்கையை வெளிப்படுத்துவதில் தவறேதும் இல்லை. 

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆர்.நே.நகர் இடைத்தேர்தலை நாங்கள் ஒரு குறியீடாக எடுத்துக்கொள்ளவில்லை. எல்லா இடைத்தேர்தல்களுமே எப்படி நடக்கும் என்பது நமக்குத் தெரியும். அதிலும் ஆர்.கே.நகர் தேர்தலின்போது என்ன நடந்தது என்பது உலகத்திற்கே தெரியும். பி.ஜே.பி. வாங்கிய வாக்குகள் பற்றிக் கூறும் காங்கிரஸ், ஆர்.கே.நகரில் தனித்து நின்றிருந்தால் தெரிந்திருக்கும். உள்ளாட்சித் தேர்தலுக்கு பி.ஜே.பி. இப்போதே தயாராகிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை பி.ஜே.பி. ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறேன். எல்லாக் கட்சிகளுக்கும் முன்பே பி.ஜே.பி. விண்ணப்பப்படிவங்களை அளித்துள்ளோம். மாவட்ட அளவிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி பற்றி எந்தக் கட்சியும் அறிவிக்கவில்லை. அப்படியிருக்கையில் பி.ஜே.பி. ஏன் அறிவிக்க வேண்டும்?  

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் உள்ளுர் பிரச்னைகளுடன் தொடர்புடையவர்கள் வெற்றிபெறுவது இயல்பு என்றாலும்கூட, பி.ஜே.பி. மாநிலம் முழுவதும் பரவலாக தனது இருப்பை உறுதிசெய்யும் தேர்தலாக அமையும்" என்றார்.

எதிர்காலத்தில் தமிழகத்தில் பி.ஜே.பி-யின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து நாமும் பார்ப்போம்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்