`ஐ.ஐ.டி-யில் சம்ஸ்கிருத பாடலைப் பாடியதில் தவறில்லை' - சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் சம்ஸ்கிருத பாடல் பாடியதில் தவறில்லை என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

சுப்பிரமணியன் சாமி

ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் மத்தியக் கப்பல் போக்குவரத்துத் துறைகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (பிப்.,26) கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில், மத்தியப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக மாணவர்கள் மகா கணபதி என்ற சம்ஸ்கிருத பாடலைப் பாடினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் உள்ள ஐஐடி-யில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு சம்ஸ்கிருத பாடல் பாடப்பட்டதற்கு, தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, ஐஐடி-யில் சம்ஸ்கிருத பாடல் பாடப்பட்டது தவறில்லை. தமிழக அரசின் நிகழ்ச்சிகளில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியமில்லை. நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உருவாக்கப்பட்டதுதான் ஐஐடி'' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!