அதிகாலையில் வயலுக்குச் சென்ற விவசாயிக்கு நடந்த கொடூரம்!

திருப்போரூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். மின் வாரிய அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே உள்ளது மேலையூர். இங்கு சுப்பிரமணி என்பவர் விவசாயம் செய்து வருகிறார். தினமும் அதிகாலையில் எழுந்து நெற்பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சி வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று அதிகாலை தனது வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது, மின்கம்பி அறுந்து வயலில் விழுந்து கிடந்தது. இருளில் மின்கம்பி தெரியாததால் அவர் அதை மிதிக்க நேர்ந்தது. இதனால், அந்த இடத்திலேயே சுப்பிரமணி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். காலையில் வயலுக்குச் சென்றபோது அப்பகுதியினர் அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

திருப்போரூர் பகுதியில் உள்ள மேலையூர், கொண்டங்கி, வளர்குன்றம், பெருந்தண்டலம் போன்ற கிராமங்களில் விவசாய நிலங்களில் மின்கம்பி தாழ்வாகச் செல்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக அவை மாற்றப்படவில்லை. காலப்போக்கில் அவை தாழ்வாக தொங்க ஆரம்பித்துவிட்டது. இதனால் அவ்வப்போது மின்கம்பிகள் அறுந்து விழத் தொடங்கிவிட்டன. இதனால் ஆடு, மாடுகள் அடிக்கடி இறந்து விடுகின்றன. விவசாயிகளின் உயிரிழப்பும் தொடர்கிறது. கிராமப்பகுதி என்பதாலும் விவசாயப்பகுதி என்பதாலும் மின்வாரியம் அலட்சியம் காட்டுகிறது. இதனால் தொடர் உயிரிழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!