வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (26/02/2018)

கடைசி தொடர்பு:17:50 (26/02/2018)

`நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று!' - ஜெயானந்துக்கு `ஷாக்' கொடுத்த தி.மு.க மாஜி 

ஜெயானந்த்

'போஸ் மக்கள் பணியகம்' என்ற பெயரில் சமூகநல அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார் திவாகரன் மகன் ஜெயானந்த். ' திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த 150 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள், இஸ்திரிப் பெட்டி ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார். ஆனால், ' இந்த விழாவில் தி.மு.க முன்னாள் அமைச்சர் சாமி கலந்துகொண்டு உதவிகளை வழங்குகிறார்' என வந்த செய்தியால் அதிர்ச்சியடைந்துவிட்டார் ஜெயானந்த்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிட்டபோது, தேர்தல் பிரசார வேலைகளில் ஆர்வம் காட்டினார் ஜெயானந்த். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ வெளியானபோது, தினகரனுக்கு ஆதரவாகவே பேட்டி அளித்தார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு, போஸ் மக்கள் பணியகம் என்ற பெயரில் இயங்கி வருகிறார். கல்வி உதவித் தொகை, நலத்திட்ட உதவிகள் வழங்குவது எனச் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த சிலர், ஜெயானந்த்தை அணுகியுள்ளனர். ' எங்களுடைய உதவும் கரங்கள் அமைப்பின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு உதவிகள் வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்' எனக் கூற, தன்னுடைய செலவில் கிரிக்கெட் மட்டை, கேரம்போர்டு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களையும் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிள், இஸ்திரிப் பெட்டி உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். 

இதனையடுத்து, கடந்த 24-ம் தேதி மாலை நிகழ்ச்சிக்குச் செல்வதற்காகக் கிளம்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரைத் தொடர்பு கொண்ட அவரது ஆதரவாளர் ஒருவர், ' நாம் நினைத்தது வேறு. இங்கு நடப்பது வேறு. உங்கள் படத்தோடு கூடிய சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார்கள். ஆனால், நலத்திட்ட உதவிகளை கே.பி.பி.சாமி வழங்குவார் என அறிவிக்கிறார்கள். சாமி கலந்துகொள்ளும் விழாவில் நீங்கள் கலந்துகொண்டால், அது வேறு மாதிரியான தோற்றத்தைக் கொடுத்துவிடும். நிகழ்ச்சியில் பங்கேற்க வர வேண்டாம்' எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார் ஜெயானந்த்.