``என்னை வஞ்சிக்கிறீர்கள்'' - செய்தியாளர்களிடம் கடுகடுத்த அமைச்சர் விஜய பாஸ்கர் | Vijayabaskar slams Media person

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (26/02/2018)

கடைசி தொடர்பு:18:03 (02/07/2018)

``என்னை வஞ்சிக்கிறீர்கள்'' - செய்தியாளர்களிடம் கடுகடுத்த அமைச்சர் விஜய பாஸ்கர்

அமைச்சர் விஜய பாஸ்கர்

"என்னைப் பற்றி எந்த பத்திரிகையிலும் செய்தி வருவதில்லை. எந்த சேனலிலும் பேட்டி வருவதில்லை. ஆனால், நான் பேட்டிக் கொடுக்கும் விசயங்களை எடுத்துக்கொண்டு போய் எனது எதிரியிடம் கொடுத்துவிடுகிறீர்கள். அப்புறம், 'இதை செய்து கொடுங்க,அதை செய்து கொடுங்க'ன்னு மட்டும் சலுகைகள் செய்ய சொன்னா எப்படி?" என்று கரூர் மாவட்ட பத்திரிகையாளர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் காய்ச்சி எடுத்துவிட்டார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ள நெரூரில் புதிய தார்சாலையை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தல், மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியை கவரேஜ் செய்ய சென்றிருந்த பத்திரிகையாளர்கள் அமைச்சரிடம், "எல்லா மாவட்டங்களிலும் அங்குள்ள பத்திரிகையாளர்களுக்குச் சலுகைவிலை வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது. ஆனால், பல வருஷமா முயன்றும், எங்களுக்குத் தரப்படவில்லை. நீங்கள் எங்களுக்குச் சலுகை விலையில் வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யணும்" என்று கோரிக்கை வைத்தனர். அதை கேட்டதும் முகம் கடுகடுத்த அமைச்சர்,"என்னைப் பற்றி யாரும் செய்தி போடுவதில்லை. நான் சொல்வதை எழுதி கொள்கிறீர்கள். போட்டோ எடுக்கிறீர்கள். ஆனால், எந்த பத்திரிகையிலும் வருவதில்லை. வீடியோ எடுக்கிறீர்கள். ஆனால், எந்த சேனலிலும் வருவதில்லை. மாறாக நான் கொடுக்கும் பேட்டி பற்றிய தகவல்களை எனது எதிரியிடம் கொண்டு போய் கொடுத்து, என்னை வஞ்சிக்கிறீர்கள். ஆனால், இப்போது சலுகைகள் மட்டும் என்னிடம் கேட்டால் எப்படி?" என்று சொல்ல, பத்திரிகையாளர்கள் அனைவரும் கோபத்தின் உச்சிக்குச் சென்றனர்.