வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (26/02/2018)

கடைசி தொடர்பு:21:00 (26/02/2018)

ஆழியாறு பிரச்னைக்கு சிறுவாணியில் கைவைத்த கேரளா... வலுக்கும் எதிர்ப்புகள்!

ஆழியாறு அணை பிரச்னைக்காக, சிறுவாணி அணையிலிருந்து கூடுதல் தண்ணீரை திறந்துவிட்டுள்ள கேரளாவுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின்கீழ், கேரளாவுக்கு, ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆழியாறு அணையிலிருந்து, தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்று கூறி கேரள விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக, கேரளாவுக்குச் சென்றிருந்த, தமிழக வாகனங்கள்மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், தமிழக - கேரள எல்லையில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

சிறுவாணி

இதனிடையே, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, தனது கட்டுப்பாட்டில் உள்ள சிறுவாணி அணையிலிருந்து, அதிகளவு தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. இதனால், சிறுவாணி அணைணயின் நீர் மட்டம் வேகமாகக் குறைந்துவருகிறது. இதையடுத்து, ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. சிறுவாணி அணையிலிருந்து கேரளாவுக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இது குறித்து கோவை சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்தி கூறுகையில், "கோவை மாநகராட்சியில் தினமும் 10 லட்சம் மக்களுக்கு சிறுவாணி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கேரள அரசு சிறுவாணி அணையிலிருந்து, பழங்குடியின மக்களுக்கும் விலங்குகள் குடிநீருக்காகவும், ஒரு விநாடிக்கு 60 லிட்டர் குடிநீர் திறந்து விட்டுள்ளனர். ஏற்கெனவே, பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு சிராவயல், பாடவயல், தேக்குவட்டை ஆகிய 3 இடங்களில் தடுப்பணையைக் கட்டியுள்ளது. இதன்மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது, சிறுவாணி அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிட்டுள்ளதால், சிறுவாணி அணையின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். இப்போது, தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ளது எனக் கூறினாலும், அதை உறுதி செய்ய வேண்டும். தமிழக அதிகாரிகள், கேரள அதிகாரிகளிடம் பேசி, கோவை  எம்.எல்.ஏ-க்கள், அனைத்துக்கட்சித் தலைவர்களை அழைத்துச் சென்று பார்வையிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படவில்லையெனில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கலந்துபேசி போராட்டங்கள் நடத்தப்படும்" என்றார்.

கேரளாவின் இந்தச் செயலுக்கு பா.மக இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.