வெளியிடப்பட்ட நேரம்: 21:19 (26/02/2018)

கடைசி தொடர்பு:21:19 (26/02/2018)

`இவர்கள் பிராய்லர் கோழிகள்' - தினகரனை வறுத்தெடுத்த வைகைச்செல்வன்

''ஆர்.கே நகரில் தினகரன் வெற்றி பெற்றது நியாயமானதா; பணத்தை கொடுத்தால் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் சிலர்'' என்று தினகரனை கடுமையாக விமர்சனம் செய்தார் வைகைச்செல்வன்.

வைகைச்செல்வன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குக் கட்சியின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைசெல்வன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ''பிறந்தநாளில் மட்டும் நினைத்துவிட்டு மற்ற நாள்களில் ஜெயலலிதாவை மறந்துவிடுபவர்கள் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அல்ல. அரசியலில் படிப்படியாக உயர்ந்தவர் ஜெயலலிதா. ஆனால், தற்போது கமல், ரஜினி அரசியலுக்காக வருவது பற்றி மக்கள் எண்ணி நகையாடுகிறார்கள். அரசியலுக்கு வருபவர்களுக்குத் தனிமனித ஒழுக்கம் வேண்டும்.

அரசியலுக்கு வருவதாகச் சொல்லும் ரஜினி, கமல் இருவரும் தமிழக மக்களின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்ததுண்டா. அவர்களால் அரசியல் செய்வதற்காக திடீரென தமிழக அரசை குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது. அதிமுக பொதுமக்களால் தொடங்கப்பட்ட கட்சி. யாராலும் அழிக்கமுடியாது. தினகரனுக்கு ஆர்.கே நகரில் கிடைத்த வெற்றி நியாயமானதா. மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம். பணத்தை கொடுத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் தினகரன் தரப்பினர். அதிருப்தியாளர்களின் கூட்டமே தினகரன் அணி.  அதிருப்தியாளர்களால் என்னாலும் வெற்றி பெற முடியாது. இவர்கள் பிராய்லர் கோழிகள் போன்றவர்கள்'' என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.