வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (26/02/2018)

கடைசி தொடர்பு:22:00 (26/02/2018)

மாநகராட்சி அதிகாரியைச் சிக்கவைத்த ரூ.40,000 லஞ்சம்!

லஞ்சம்

மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ளது மதுரை மாநகராட்சி அலுவலகம். இங்கு பணியாற்றும் அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் வேலைகளைக் காய் நகர்த்துவதாகப் பொதுமக்களும், தனியார் கான்ட்ராக்டர்களும் புகார் தெரிவித்து வந்தனர். இருந்தபோதிலும் அதை நிரூபிக்க முடியாததால் தொடர்ந்து குற்றங்கள் அரங்கேறின. இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் இயங்கி வரும் உள்ளூர் திட்டக் குழுமத்தில் வீடு கட்டுவதற்கு மனைகளை முறைப்படுத்தி வழங்கும் அதிகாரி டைட்டஸ் என்பவர் திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் பகுதி காசிநாதன் என்பவரிடம் மனைக்கு அனுமதி வழங்க ரூ.40,000 லஞ்சம் கேட்டுள்ளார்.

முறையாக அரசு செய்துகொடுக்க வேண்டிய வேலைக்கு அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் காசிநாதன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அதிகாரி டைட்டஸைப் பிடிக்க ஆய்வாளர் கண்ணன் தலைமையில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் காசிநாதனிடம் கொடுத்து அனுப்பினர். இந்த ரூபாய் நோட்டுகளை அதிகாரி டைட்டஸிடம் காசிநாதன் கொடுத்தபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.