''கமல் மீதான கவுதமியின் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு உரியது'' - திரைத்துறை விளக்கம் | Actress gautami's allegations against kamalhaasan are doubtful, says sources

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (27/02/2018)

கடைசி தொடர்பு:17:03 (27/02/2018)

''கமல் மீதான கவுதமியின் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு உரியது'' - திரைத்துறை விளக்கம்

 

'கமல், எனக்கு சம்பளப் பாக்கித் தரவில்லை' என்ற நடிகை கவுதமியின் ட்விட்டர் பதிவுக்கு அரசியல் அரங்கில் பலத்த அதிர்வலைகள். 'நல்லா சொன்னீங்க சகோதரி' என்று பதில் கமென்ட் செய்துள்ளார் பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா!

'பயணிக்க வேண்டிய தூரம் அதிகமாக இருப்பதால், விமர்சனங்களை யாரும் பொருட்படுத்த வேண்டாம்' என்று தனது 'மக்கள் நீதி மய்யம்' நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் உத்தரவு பிறப்பித்திருக்கும் இந்தச் சூழலில், கமல்ஹாசன் மீதே 'சம்பளப் பாக்கி' புகாரை எழுப்பியிருக்கும் கவுதமியின் ட்விட்டர் பதிவு முக்கியத்துவம் பெறுகிறது. 

''2016 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நானும் கமல்ஹாசனும் மனமொத்து பிரிந்துவிட்டோம். நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தது 13 ஆண்டுகள். அந்தக் காலகட்டத்தில் நான் ஒரு ஆடை வடிவமைப்பாளராக கமல்ஹாசனின் 'ராஜ்கமல் நிறுவனத்தின் படங்களுக்கும், கமல்ஹாசன் நடித்த பிற தயாரிப்பாளர்களின் படங்களிலும் பணியாற்றினேன். 2016 ம் ஆண்டு நாங்கள் பிரிந்த சமயம்வரை எனக்கு தசாவதாரம், விஸ்வரூபம் படங்களுக்கான சம்பளப் பாக்கி நிலுவையில் இருந்தது. இதுபற்றி கமல்ஹாசனிடமும், ராஜ்கமல் நிறுவனத்திடமும் பலமுறை கேட்டும் இன்னும் எனக்கு முழுமையான பணம் வந்து சேரவில்லை'' என தனது பிளாக்கில் பதிவிட்டிருக்கிறார் கவுதமி.

ஏற்கெனவே, ம.நீ.ம கட்சியின் உயர் மட்டக் குழுவில், கமல்ஹாசன் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு உரிய இடம் தரப்படவில்லை என்றக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது தனிப்பட்ட ரீதியாக கமல்ஹாசன் மீது கவுதமி தெரிவித்திருக்கும் இந்தச் சம்பளப் பாக்கிப் பிரச்னை குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள்....

கௌதமி

''கமல்ஹாசனும் கவுதமியும் உறவிலிருந்து பிரிந்து முழுதாக ஓர் ஆண்டு கடந்துவிட்டது. பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக அவர்களுக்குள் ஏற்கெனவே எந்தவிதமான ஒப்பந்தங்கள் - புரிதல்கள் இருந்துவந்தன என்ற விவரங்களெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால், அப்படியே பிரச்னை இருந்துவந்தாலும்கூட, இத்தனை நாள்களாக அமைதியாக இருந்துவந்த கவுதமி திடீரென இப்போது இப்படியொரு கோரிக்கையை எழுப்பியிருப்பதற்கான காரணம் என்னவென்று அறிய வேண்டும்.

'தனக்கும் தன் மகளுக்குமான வாழ்வை மறு சீரமைப்பதற்கான பணம் என்பது இதன் மூலம் வருபவை மட்டுமே' என்று கவுதமி கூறியுள்ளார். முறைப்படி ஒப்பந்தம் போடப்பட்டிருந்தால், கவுதமி சட்ட ரீதியாகவே இந்தப் பிரச்னையைக் கையாண்டிருக்க முடியும்.   ஆனால், அப்படியெல்லாம் செய்யாமல், தடாலடியாக சமூக ஊடகத்தில் இப்படியொரு புகாரைத் தட்டிவிட்டிருக்கிறார் என்றால், அவரது நோக்கம் என்னவென்று புரியவில்லை'' என்கிறார்கள்.

'சம்பளப் பாக்கி' விவகாரம் குறித்து சினிமா வட்டாரங்களில் விசாரித்த வகையில். '' 'தசாவதாரம்' படத் தயாரிப்பாளர், ஆஸ்கர் ரவிச்சந்திரன்; 'விஸ்வரூபம்' படத் தயாரிப்பு பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்தார். இந்தப் படங்களில் கவுதமிக்குச் சம்பளப் பிரச்னை இருந்தால், அதற்கு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் எந்தவிதத்தில் பொறுப்பேற்க முடியும்?

திரைத்துறையைப் பொறுத்தவரை, ஒரு படத்தில் வேலை செய்யக்கூடிய நடிகர்களில் ஆரம்பித்து டெக்னீஷியன்கள் வரை அனைவரிடமும், சம்பளம், முன்பணம் போன்ற விவரங்களைத் தெளிவாக ஒப்பந்தம் போட்டுத்தான் வேலையை ஆரம்பிப்பார்கள். அந்தவகையில் காஸ்ட்யூம் டிசைனராகக் கவுதமி பணியாற்றியதற்கான சம்பளத் தொகை அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. மாறாக, அவருக்கான சம்பள பாக்கி இருந்தால், அதை அவர் சட்டப்பூர்வமாக அணுகவேண்டும் . கமல்ஹாசன் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி வழி நடத்திவரும் இவ்வேளையில், இப்படியொரு பிரச்னையை கவுதமி எழுப்பியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது'' என்கின்றனர்

கமல்ஹாசன்

 

இதுகுறித்து விளக்கம் கேட்கும் நோக்கில் கவுதமியைத் தொடர்புகொண்டு பேசினோம்....

''சம்பளப் பாக்கி விஷயமாக நான் கேட்டிருப்பதென்பது, கமல்ஹாசன் மீது நான் வைக்கும் குற்றச்சாட்டு என்றோ அல்லது அவருக்கு என்னுடைய கோரிக்கை என்றோ சொல்வது சரியல்ல... அவை அத்தனையும் நடந்த  உண்மை! நான் சொல்ல நினைத்ததை ஏற்கெனவே சமூக ஊடகத்தில் விளக்கமாகத் தெரிவித்துவிட்டேன். புதிதாகச் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. மேற்கொண்டு என்னுடைய பேட்டிதான் வேண்டும் என்றால், இன்றும் நாளையும் நான் பிஸியாக இருக்கிறேன். அதன்பிறகு பார்க்கலாம்... '' என்றார் கவுதமி.


டிரெண்டிங் @ விகடன்