வெளியிடப்பட்ட நேரம்: 19:18 (26/02/2018)

கடைசி தொடர்பு:19:28 (26/02/2018)

`சிக்னல் தாண்டி சென்றது பெரிய குற்றமா?' - எஸ்.ஐ-யுடன் தகராறில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது

சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்ட சகோதரர்கள் இரண்டு பேரைக் காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைது

திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும் கிருஷ்ணராஜ் நேற்று மாலை 6 மணியளவில் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சென்னை சூளையைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான செந்தில் குமரன், செல்வகுமரன் சிக்னல் போட்டிருந்தபோது கோட்டைத்தாண்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த காவலர், அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.

வண்டியிலிருந்து சாவியை எடுத்த போலீஸார் அவர்களின் பைக்கின் ஆவணங்களை எடுத்து வரச் சொல்லி ஆய்வு செய்தனர். அப்போது, சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து கொலை, கொள்ளை, செயின் பறிப்பு எனப் பல திருட்டு நடக்குது. சிக்னல் தாண்டி சென்றது பெரிய குற்றமா என்று பொதுமக்கள் மத்தியில் இளைஞர்கள் கேட்டதால், ஆத்திரம் அடைந்த எஸ்.ஐ கிருஷ்ணராஜ் அவர்களைத் திட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது கிருஷ்ணராஜுக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுத் தகராறாக மாறியுள்ளது. உடனடியாக ரோந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்ட இளைஞர்களைத் திருவள்ளூர் நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அவர்கள்மீது பொது இடங்களில் திட்டி அசிங்கமாகப் பேசியதாகவும் சாலையில் வரும் வாகனங்களை வழி மறித்து அடித்ததாகவும் வழக்குப்பதிவு செய்து இரண்டாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு ஆஜர்படுத்தி சிறையிலடைத்துள்ளனர்.