வெளியிடப்பட்ட நேரம்: 20:46 (26/02/2018)

கடைசி தொடர்பு:20:46 (26/02/2018)

மறக்கமுடியாத மணப்பாடு படகு விபத்து - துக்கத்திலிருந்து மீளாத குடும்பத்தினர்!

தூத்துக்குடி மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கடற்கரையோர கிராமங்கள் உள்ளன. இவற்றில் மாவட்டத்தின் முடிவில் இருப்பது மணப்பாடு கடற்கரை.  திருச்செந்தூரிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஊர். சரிவான மணல் குன்றுகள், மணல் குன்றின் மீது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு, இப்போதும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் கலங்கரை விளக்கம். வியக்க வைக்கும் கட்டடக்கலையில் நிமிர்ந்து நிற்கும் பழைமையான கிறிஸ்துவ தேவாலயங்கள், நீலப் போர்வை விரிக்கப்பட்டதுபோல காட்சியளிக்கும் கடல்... எனப் பார்ப்பதற்கு தீவு போலவே இருக்கும். இதனால் மணப்பாட்டை தமிழகத்தின் "குட்டிகோவா" என்றே சிறப்பிட்டுச் சொல்கிறார்கள்.

 

விபத்து நிகழ்ந்த மணப்பாடு

தமிழகத்தில் உள்ள கடற்கரைகளிலேயே அமைதியானது ராமேஸ்வரம் கடல்.. ஆர்ப்பரிப்பது கன்னியாகுமரி கடல்... அமைதியாகவும் அதேநேரத்தில் ஆரவாரத்துடனும் இருப்பதுதான் மணப்பாடு கடல் பகுதி. ஒரே நேரத்தில் ஒரே வகையான கடல் சறுக்கு சாகச விளையாட்டுகளை நடத்தும் இயற்கை அமைப்புடையது இக்கடற்கரைப்பகுதி. கடல் சறுக்கு விளையாட்டு, பாராசூட் மூலம் பறத்தல் ஆகியனவும் அவ்வப்போது நடந்தேறி வருகின்றன. இந்த அழகிய ஊரை உலகறியச் செய்தது சினிமாக்கள்தாம். பல சினிமாக் காட்சிகள் இப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய உதாரணம் "நீர்ப்பறவை". இக்கடல் எவ்வளவு அழகுடனும் ரம்மியத்துடனும் காட்சியளிக்கிறதோ, அதை விட இரண்டு மடங்கு பேராபத்தும் கொண்டது. இந்தக் கடலைப் பார்த்தாலே கடற்கரையில் நின்றுகொண்டு கால் நனைக்கவும், குளிக்கவும் தோன்றும். ஆனால், இக்கடல் ஆழமானது மட்டுமல்லாமல் சுழல் அலைகள் அவ்வப்போது எழுந்து ஆர்ப்பரிக்கக்கூடியது. இந்தச் சுழல் அலைதான் பேராபத்திற்கு உட்படுத்தி விடும்.

 

மீன் பிடிப்பதற்காகச் செல்லும் ஃபைபர் படகுகளில் மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லாத நேரத்தில், தலைக்கு ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு சில நூறு மீட்டர் தூரம்வரை சென்று திரும்பி, காசு பார்த்தும் வந்தனர் மீனவர்கள். இப்படி ஒருமுறை, படுக்கப்பத்து ஊருக்கு அருகில் உள்ள அழகம்மன்புரத்தைச் சேர்ந்தவர்கள், ஊரிலுள்ள அழகம்மன் கோவில் விழாவை முடித்துவிட்டு பொழுதைக் கழிக்க மணப்பாட்டிற்கு படையெடுத்தனர். திருச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் குழந்தை வரத்திற்காக, திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு குடும்பத்துடன் மணப்பாட்டிற்கு வந்திருந்தார். கடலழகை ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, படகில் சவாரி செய்யலாம் என ஆசை சிறகடிக்க, அங்கு நின்ற ஒரு மீனவரிடம் பேசி அவரின் படகில் 22 பேர் ஏறினர். 

 

சுமார் 300 மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென சுழல் அலை தூக்கிவாரிப் போட்டதில் அந்தப் படகு கவிந்து விபத்துக்குள்ளானது. மீன்பிடித்து விட்டு வலையைக் கட்டாகக் கட்டாமல் படகிற்குள் நீட்டுவாக்கில் விரித்தே அந்த மீனவர் வைத்திருந்ததால் படகு கவிழ்ந்ததும் அதில் இருந்தவர்கள் வலைக்குள் சிக்கினர். இந்த விபத்தில் பத்துப் பேர் உயிரிழந்தனர். எட்டுப் பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்த 10 பேரில் ஒன்பது பேர் இக்கிராமத்தில் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் வேதனைக்குரியது. திருச்சியைச் சேர்ந்த கார்த்திகேயனின் மனைவி சுகன்யா மற்றொருவர். இக்கோரச் சம்பவம் நடந்து பிப்ரவரி 26-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. மனைவி, மகள், மகன் எனச் சொந்தங்களைப் பறிகொடுத்த அந்தக் கிராமத்தினர் துயரத்திலிருந்து மீண்டு விட்டனரா? இந்தக் கோரச் சம்பவத்திற்குப் பிறகு மணப்பாடு கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி விசாரிப்பதற்காக அழகம்மன்புரம் கிராமத்திற்குச் சென்றோம். 

 

ஊரே வெறிச்சோடி அமைதியாக இருந்தது. வீட்டு வாசலில் அமர்ந்திருந்த ஒரு தாத்தாவிடம் பேச்சுக் கொடுத்தோம். “ஆமாப்பா... படகு கவுந்து இறந்த சம்பவம் நடந்து ஒரு வருசம் ஆகப்போகுதா. அதை நினைச்சாலே நெஞ்சு வலிக்குது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு கொஞ்ச பேரு ஊரைக் காலிசெய்துட்டு, பக்கத்துல உள்ள நயினாபுரம் கிராமத்துல குடியேறி அங்க இருக்காங்க” என்றார். அவர் சொன்னது போலவே சில வீடுகளில் பூட்டு தொங்கியது. "பொஞ்சாதி, மகன், மகளைப் பறி கொடுத்த ஆறுமுகக்கொடியோட வீடு இதுதான். கொஞ்ச நேரத்துல வந்துடுவான்” என தாத்தா சொல்லி முடிக்கவும், ஆறுமுகக்கொடி வரவும் சரியாக இருந்தது.

 

arumugakodi and gunaseelan

ஆறுமுகக்கொடியிடம் பேசினோம். "ஒவ்வொரு வருசமும் மாசி சிவராத்திரி திருவிழா ஊரிலுள்ள அழகம்மன் கோவிலில் விசேஷமா நடக்கும். மூன்று நாள் நடக்குற திருவிழாவுல மூன்றாவது நாள் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். போன வருசம் விளையாட்டுப் போட்டிகள் நடக்காததுனால, பக்கத்துல உள்ள மணப்பாடு கடற்கரைக்குப் பொழுதைக் கழிக்க ஊருல இருந்து டிராக்டர், வேன்களில் போயிருந்தோம். மணப்பாடு ஊரு பார்க்க ரொம்ப அழகா இருக்கும். அந்தக் கடற்கரையில் சின்னக்குழந்தைகள் விளையாடிக்கிட்டு இருந்தாங்க. படகுல போகணும்னு, சொன்னதுனால கரையில நின்ன ஒரு படகுக்காரரிடம் சொல்லி முதலில் 15 பேரு ஏறினோம். நாங்க, ஒரு ரவுண்டு போயிட்டு வந்தோம். அடுத்த முறை, 20 பேருக்கு மேல ஏறிட்டாங்க. சமமா உட்காராம, ஒரே இடத்துல சேர்ந்து உட்கார்ந்ததனாலயும், அந்த நேரத்துல அடிச்ச சுழல் அலையினாலயும் படகு கவிழ்ந்திடுச்சு. கடலுக்குள்ள தொழிலுக்குப் போகுறதுக்காக, படகில் விரிச்சுவெச்ச வலையானது, படகு கவிழ்ந்ததும் தண்ணீரில் மிதந்தது. படகு கவிழ்ந்த பதற்றத்துல ஊர்க்காரர்கள் சத்தம் எழுப்பி கையை காலை ஆட்டியதால, வலைக்குள் சிலர் சிக்கிட்டாங்க. வலைக்குள் சிக்காதவர்களை கரையிலிருந்த மீனவர்கள் காப்பாத்தினாங்க. வலைக்குள் சிக்கியவங்கதான் இறந்து போயிட்டாங்க.


இறந்துபோன பத்துப்  பேரில் ஒன்பது பேர் எங்க ஊரு ஆளுங்க. இதுல என் குடும்பத்துல மட்டும்தான் என் மனைவி, மகள், மகன்னு மூணு பேரை பறிகொடுத்துட்டேன். என்னோட அண்ணன் குடும்பத்துல அண்ணனும், அண்ணியும் 2 குழந்தைகளை அநாதையா ஆக்கிட்டு போயிட்டாங்க. இன்னொரு குடும்பத்துல அம்மாவும், மகனும். உயிரிழந்த ஒன்பது பேரில் எட்டுப் பேரை ஊருக்குப் பொதுவான இடத்துல அடுத்தடுத்துத்தான் அடக்கம் செய்தோம். மனைவி, குழந்தைகள் இல்லாத வீட்டில் இருக்க எனக்கு விருப்பம் இல்ல.. அதனால பக்கத்து ஊருல ஒரு வீட்டுல வாடகைக்கு இருக்கேன். மனைவி, குழந்தைகள் ஞாபகம் வரும்போது, மணப்பாடு கடற்கரைக்குப் போவேன். கடற்கரையிலயே உட்கார்ந்து கடலையே பாத்துக்கிட்டிருப்பேன். அந்த நேரத்துல சுற்றுலாப் பயணிகள் யாராவது கடலுக்குள் காலை நனைச்சுக்கிட்டு நடந்து போனா, பதறிப்போயி.. 'கடலுக்குள்ள ரொம்ப தூரம் போகக் கூடாது. ஆழமான கடல்னு' அவங்களிடம் சொல்லி எச்சரிப்பேன். என்னோட மூணு செல்லங்களும் என்னை விட்டுப் போயி ஒருவருசம் ஆகிவிட்டது. இறந்தவங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயம் அடைஞ்சவங்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் அரசு சார்பில் கொடுத்தாங்க. இந்தப் பணத்தை வச்சு, நான் இழந்த மூணு பேரையும் மீட்க முடியுமா..?” எனக் கண்ணீருடன் முடித்தார். 

 

உடன்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குணசீலனிடம் பேசினோம், “கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 26-ம் தேதி, படகு விபத்து நடந்த பிறகு, காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தினர் 10 பேர், கடந்த ஜூன் 26-ம் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று தொழுகையை முடிச்சுட்டு, இந்த மணப்பாடு கடற்கரைக்குப் பொழுதுபோக்கிற்காக வந்தனர். அப்போது, ஐந்து சிறுவர்கள் கடலில் குளிக்கச் சென்றனர். இதில் அலையின் வேகத்தில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரிபாஸ்டீன் என்பவரது மகன்கள் வர்ஷா அகமது, ஷார்லிக் ஆகிய இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகுதான் தூத்துக்குடி மண்டலக் கடலோரக் காவல் குழுமம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டன. 'மணப்பாடு கடற்கரைப் பகுதியில் நிரந்தர செக் போஸ்ட் அமைக்கவும், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் அல்லது கண்காணிப்பு பணியில் போலீஸார் பணியமர்த்தப்பட வேண்டும். கடற்கரைப் பகுதியில் மின் விளக்கு அமைக்க வேண்டும். ஆண், பெண் கழிப்பறைகள் கட்ட வேண்டும்' எனக் கோரிக்கை வைத்திருந்தோம். அது ஒரு வருடமாகியும், தற்போதுவரை நிறைவேற்றப்படவில்லை. 'மீன் பிடிக்கச் செல்லும் படகுகளில் மீனவர்களைத் தவிர வேறு யாரையும் ஏற்றிச் செல்லக் கூடாது' என ஆட்சியர் கண்டிப்பான உத்தரவால், தற்போதுவரை படகுகளில் யாரையும் மீனவர்கள் ஏற்றிச் செல்வதில்லை. இது ஒன்று மட்டும்தான் உருப்படியானது” என்றார்.

 

ஒவ்வொரு முறை ஏதாவது அசம்பாவிதம் நடந்த பிறகுதான், இந்த அரசு நடவடிக்கை எடுக்கிறது. அதை முன்பே செய்தால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுக்குமே..? 

 

 

       

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்