'தஞ்சைப் பல்கலைக் கழகத்திலிருந்து ஆவணங்களை எடுத்துச் செல்லக் கூடாது' - எச்சரிக்கும் மாணவர் கூட்டமைப்பு!

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலங்கள் உள்பட பலர் ஏராளமாக நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்புக் குழு, தஞ்சைப் பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்றது.

தஞ்சை பல்கலைக்கழகம்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வுச் சிறகுகள், ஆய்வு மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சிவகுமார், "ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மூல ஆவணங்கள் மூலம் மட்டுமே ஆய்வுகள் மேற்கொள்ள முடியும். தமிழர்களின் பண்பாடு, வாழ்வியல், இலக்கியம் உள்ளிட்ட அனைத்துக்குமான மூல ஆவணங்கள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே உள்ளன. தொல்ப்பொருள் சான்றுகள், லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகள் இங்குள்ளன. இவை அனைத்தும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் செல்லப்படக்கூடிய அபாயம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இவற்றை அங்கு கொடுத்தால் தமிழர்களின் தொன்மையான வரலாற்றுச் சிறப்புகளை அழிப்பதற்கும் திரிபு செய்வதற்குமான வாய்ப்புகள் அதிகம். 

ஏதோவோர் உள்நோக்கத்தோடுதான் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க முயற்சிகள் நடப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். எதிர்காலத்தில் தமிழர்களின் தொன்மையான வரலாற்றினை, வாழ்வியலை தெரிந்துகொள்வதற்கான உண்மையான ஆவணங்கள், ஆதாரங்கள் எதுவுமே நம்மிடம் இருக்காது. எனவே, தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து எந்த ஓர் ஆவணங்களையும் இங்கிருந்து வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தமிழின உணர்வாளர்கள், தமிழ்ப்பற்றாளர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும்.” என்றார்.  இதற்கிடையே ஓலைச்சுவடிகள் குறித்த மாணவர்களின் குற்றச்சாட்டு குறித்து தஞ்சைப் பல்கலைக்கழகம் சார்பிலோ, ஹார்வர்டு தமிழ் இருக்கை குழு சார்பிலோ எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!