‘தப்பியோடியக் குற்றவாளியைப் பிடிப்பதில் மெத்தனம்' - போலீஸார் மீது புகார் அளித்த ஆட்டோ டிரைவர்! | 'The culprit who escaped the station' - Complain against the police

வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (26/02/2018)

கடைசி தொடர்பு:22:40 (26/02/2018)

‘தப்பியோடியக் குற்றவாளியைப் பிடிப்பதில் மெத்தனம்' - போலீஸார் மீது புகார் அளித்த ஆட்டோ டிரைவர்!

போலீஸார்

போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தப்பித்து ஓடிய குற்றவாளியைப் பிடிப்பதில் போலீஸார் மெத்தனம் காட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட போலீஸார் மற்றும் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் மாணிக்கம் என்பவர் புகார் அளித்தார்.

ஈரோடு அடுத்த கருமாண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். வாடகைக்கு டெம்போ ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த 22-ம் தேதி இரவு 9 மணியளவில் கருமாண்டம்பாளையம் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள பழக்கடைக்குப் பழம் வாங்கச் சென்றிருக்கிறார். அப்போது அந்தப் பழக்கடையில் நின்றுகொண்டிருந்த நத்தமேடு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (25) என்பவர், மாணிக்கத்தை ஜாதிப் பெயரைச் சொல்லி ‘நீ என்ன பெரிய ஆளா... நீ வந்து கேட்டா உடனே தரணுமா’ எனக் கூறியுள்ளார். பதிலுக்கு மாணிக்கம் ‘தம்பி உனக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையுமில்லை. கம்முன்னு இருப்பா’ன்னு என்று சொல்லியிருக்கிறார். இருந்தும் ‘நீ சொன்னா நான் கேக்கணுமா’ என மறுபடியும் ஜாதிப் பெயரைச் சொல்லி பழக்கூடையை தூக்கி அடித்து வினோத்குமார் மாணிக்கத்தை கீழே தள்ளியிருக்கிறார். அப்போதே மாணிக்கம் போலீஸாருக்கு போன் மூலமாக தகவலை சொல்லியிருக்கிறார். பந்தோபஸ்துக்காக போயிருப்பதால் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என போலீஸார் பதில் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

இந்தநிலையில், மறுநாளான 23-ம் தேதி காலை மாணிக்கம் இருந்த ஆட்டோ ஸ்டாண்டிற்குச் சென்ற வினோத்குமார் மறுபடியும் வம்பிழுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம் போலீஸாருக்கு தகவல் தர, மலையம்பாளையம் போலீஸார் வினோத்குமார் மீது வழக்குப் பதிவு செய்து ஸ்டேஷனில் வைத்திருக்கின்றனர். அப்போது ‘தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிய வினோத்குமார் ஸ்டேஷனிலிருந்து தப்பித்து ஓடியிருக்கிறான். போலீஸாரும் தேடிக் களைத்துப் போனதால் ஆள் கிடைக்காமல் ஸ்டேஷனுக்குத் திரும்பியிருக்கின்றனர். இந்தநிலையில் இன்று எஸ்.பி அலுவலகத்திற்கு வந்த மாணிக்கம், ‘கிட்டத்தட்ட 4 நாள்களாகியும் தற்போது வரை தப்பித்து ஓடிய குற்றவாளியை போலீஸார் பிடிக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட போலீஸார் மீதும், தப்பியோடிய வினோத்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் மனு அளித்தார்.

இதுகுறித்து மாணிக்கம் நம்மிடம் பேசுகையில், “ஒரு குற்றவாளி ஸ்டேஷன்ல இருந்து தப்பிச்சி ஓடுறான்னா...அவன் எது வேணும்னாலும் பண்ணுவான். நான் வாடகைக்கு டெம்போ ஓட்டுறேன். எந்த நேரத்துல யார் கூப்பிட்டாலும் சவாரிக்குப் போயாகணும். அந்தமாதிரியான நேரத்துல அவன் தாக்குனா எனக்குத் தானே பாதிப்பு. அவன் மீது ஏற்கெனவே பல வழக்குகள் இருக்கு. ஜெயில்ல எல்லாம் இருந்திருக்கான். அதுமட்டுமல்லாம, அந்த ஏரியாவுலயே சுத்திக்கிட்டு ‘மாணிக்கத்தை நான் சும்மா விடமாட்டேன்’ என்று பலரிடமும் சொல்லிட்டு வர்றான். எனக்கு வெளிய போகவே பயமா இருக்கு” என்று கூறினார்.