முதியோர் இல்லத்தில் நடப்பது என்ன? அரசு தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் பாலேஸ்வரம் கிராமத்தில் செயல்பட்டுவரும் செயின்ட் ஜோசப் முதியோர் கருணை இல்லத்தில் நடைபெற்றுவரும் விதி மீறல்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் தொடர்பாக  மாவட்ட நிர்வாகம் முழு விசாரணை நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் இ.சங்கர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருக்கிறார்.

உத்திரமேரூர் செயின் ஜோசப் முதியோர் இல்லம்

செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் கடந்த 20-ம் தேதி இரவு தாம்பரம், இரும்புலியூரிலிருந்து வந்த  ஆம்புலென்ஸ் ஒன்று திருமுக்கூடல் அருகே வந்தபோது, அதில் இருந்து காப்பாற்றுங்கள் என்ற அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வேனை வழிமறித்து நிறுத்தி விசாரித்துள்ளனர். வேனில் ஒரு மூதாட்டியும், ஒரு முதியவரும் இருந்ததுடன், காய்கறி மூட்டைகளிடையே ஒரு சடலமும் இருந்ததைக்கண்ட அப்பகுதி மக்கள் அந்த வேனை சாலவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

உத்திரமேரூர் செயின்ட் ஜோசப் முதியோர் இல்லம்

இந்தச் சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக இருப்பதாலும், ஏற்கனவே இந்த கருணை இல்ல செயல்பாடுகள் சம்பந்தமாக சந்தேகத்திற்குரிய தகவல்கள் இருந்ததாலும், இந்தக் கருணை இல்ல செயல்பாடுகள் தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திரண்டு காவல் நிலையத்தை முற்றுகை இட்டுள்ளனர். அவர்களைக் காவல்துறையினர். முன்னறிவிப்பின்றி தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். பொதுமக்கள் சார்பாக தரப்பட்ட புகார் மனுவைப் பெற்று பதிவு செய்து ரசீது தர மறுத்துள்ளனர். புகார் கொடுத்த கருணாகரன், தாஸ், சிலம்பரசன் மீதே பொய் வழக்கு பதிவு செய்து, கைது செய்து 3 நபர்கள் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

செயின் ஜோசப் முதியோர் இல்லம், உத்திரமேரூர்

மேலும் அரசு அதிகாரிகள் குழு செயின்ட் ஜோசப் முதியோர் கருணை இல்லத்தை ஆய்வு செய்ததில், பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 2017 நவம்பர் மாதத்துடன் அரசு அனுமதி முடிந்து விட்டதாகத் தெரிகிறது. இந்தக் கருணை இல்லத்தில் இறப்பவர்களின் சடலத்தை சுவற்றில் அமைத்துள்ள சிறு, சிறு பெட்டிகள் போன்ற பிணவறைகளில் வைத்து சிமெண்ட் பூசி அடக்கம் செய்யப்படும் வினோத நடைமுறை பின்பற்றப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும் இங்கு இறப்பவர்கள் குறித்த விவரங்களும் காவல்துறைக்கோ, சமூகநலத்துறைக்கோ தெரிவிப்பதில்லை எனவும் கூறுகின்றனர். இங்கு மர்மமான முறையில் சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதால், சடலத்தில் மிஞ்சும் எலும்புகளை விற்பனைக்காக கடத்தப்படுகிறதோ என்ற சந்தேகமும் நிலவுகிறது.

இந்த கருணை இல்லம் மனிதாபிமான முறையில் ஆதரவற்றவர்களுக்காக செயல்படுகிற அமைப்பு என கூறப்பட்டாலும், இதன் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், முறைபபடியாகவும், விதிகளுக்குட்பட்டும் இல்லாததுடன் மனித உரிமைகளை மீறுவதாகவும் உள்ளதாக பொதுமக்களிடையே பல சந்தேகங்கள் நிலவுகின்றன. எனவே, தமிழக அரசு நிர்வாகம் இதில் தலையிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக் கொணர வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!