”மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும்” ஒலிப்பெருக்கிக்கு தடை போட்ட புதுச்சேரி அரசு

மாணவர்களின் படிப்புக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அதிக சத்தம் ஏற்படுத்தும் ஒலிப்பெருக்கி பயன்படுத்தக் கூடாது என்று புதுச்சேரி கோயில்களுக்கு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி

பொதுத் தேர்வு நேரத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் பயப்படும் ஒரே விஷயம் கோயில்களில் எழுப்பப்படும் சத்தமான ஒலிகள். வருகின்ற மார்ச் 1-ம் தேதியில் இருந்து பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில், புதுச்சேரியில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள் கோயில்களில் அதிக சத்தம் எழுப்பக் கூடிய ஒலிப்பெருக்கிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் அரசுக்கு புகார் அளித்தன. அதையடுத்து புதுச்சேரி இந்து அறநிலையத்துறை அனைத்துக் கோயில்களுக்கும் சுற்றரிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது.

அதில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் நடைபெறும் விழாக்கள் மற்றும் அதிகாலை பூஜை நேரத்தில் பயன்படுத்தப்படும் ஒலிப்பெருக்கியிலிருந்து அதிக அளவிலான சத்தம் வருவதாகவும், அதனால் பொது தேர்வுக்கு தங்களை தயார்படுத்தும் மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் புகார் வந்துள்ளன. அதனால் புதுச்சேரியில் உள்ள கோயில்களில் திருவிழாக்களின் போதும் சாதாரண நாட்களிலும் அதிக சத்தத்துடன் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது. ஒலி பெருக்கி மூலம் வெளிவரும் சத்தம் மிக மிக குறைவாகவும் பொதுமக்களுக்கு பாதகம் இன்றியும் விழாக்களில் பயன்படுத்த வேண்டும். மேலும் இது சம்மந்தமாக பொதுமக்கள் ஏதேனும் குறையிருப்பின் அவற்றை கோயில் நிர்வாகிகளுக்கு அல்லது 0413-2276098 என்ற இந்து அறநிலையத்துறை அலுவலக தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!