வெளியிடப்பட்ட நேரம்: 06:17 (27/02/2018)

கடைசி தொடர்பு:16:50 (17/08/2018)

'ஆம்புலன்ஸ்' புகழ் அன்புநாதன் இல்ல மணவிழாவில் டி.ராஜேந்தர்!

 

ஆம்புலன்ஸில் அரவக்குறிச்சி தொகுதி தேர்தலுக்கு பணபட்டுவாடா பண்ண பணம் கொண்டு போன அன்புநாதன் இல்ல மணவிழாவில் இயக்குநர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டது பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. 

இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே பணம் வழங்கல் காரணமாக முதல்முறையாக தள்ளி வைக்கப்பட்ட அரவக்குறிச்சி தொகுதி கரும்புள்ளியாக பதிந்துவிட்டது. அ.தி.மு.க சார்பில் களம் கண்ட செந்தில்பாலாஜி சார்பாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய, தேர்தல் பறக்கும் படையை குழப்பும்விதமாக ஆம்புலன்ஸில் பணம் கொண்டு போக காரணமாக இருந்த கரூர் அன்புநாதனால்தான் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பிறகு, அமலாக்கப்பிரிவு போலீஸார் இவரது வீட்டில் சோதனைசெய்ய, பலகோடி ரூபாய் பணம், பணம் எண்ணும் மெஷின்கள் என்று கிடைத்தது. 

இதனால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதோடு, அன்புநாதன் மீது பல வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகள் நடந்து கொண்டிருக்க, அவரது சொந்த ஊரில் அமைதியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கரூர் பிரேம் மஹாலில் நடந்த அவரது அக்கா மகள் நவீனாவின் திருமணத்திற்கு இயக்குநர் டி.ராஜேந்தர் வர, 'இவர் எப்படி இங்கே?' என்று பலரும் புருவம் உயர்த்தினர்.

அதோடு,'முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் இருந்து யாராவது முக்கிய புள்ளிகள் வருகிறார்களா?' என்று உளவுத்துறை போலீஸார் கண்ணில் விளகெண்ணெய் விட்டு தேடினர். ஆனால், சாதாரண நபர்களைத் தவிர முக்கியப் புள்ளிகள் யாரும் வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி வந்தார். ஆனால், டி.ராஜேந்தர் கலந்து கொண்டது உளவுத்துறையே எதிர்பார்க்காத டிவிஸ்ட். இந்த திருமணத்திற்கு வருகை தரும் டி.ராஜேந்தரை வாழ்த்தி அவரது ரசிகர் மன்றத்தினர் போஸ்டர் அடித்து நகரெங்கும் ஒட்டி இருந்ததும் பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது. 

அன்புநாதனுக்கும்,டி.ராஜேந்தர் இருவருக்கும் அப்படி என்ன தொடர்பு? என்று விசாரித்தோம். "அரசியல், சினிமா இரண்டிலும் கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்ட நிலைக்கு டி.ஆர் தள்ளப்பட்டுள்ளார். அன்புநாதனும் வழக்கு, வாய்தா என்று பிரச்னைகளின் பிடியில் சிக்கி இருக்கிறார். ஆளுங்கட்சியிலோ, செந்தில்பாலாஜி தரப்பிலோ அவருக்கு உதவி கிடைத்தபாடில்லை. அதனால், இருவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். டி.ஆர் இரண்டு நாட்களுக்கு முன்பு, 'விரைவில் எனது விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள்'ன்னு பேட்டி கொடுத்தார்.  டி.ஆரின் அடுத்தக்கட்ட அரசியல் ஆட்டத்துக்கு பைனான்ஸியர் அன்புநாதன்தானாம். அன்புநாதனுக்கும் பிரச்னைகளின் வீரியத்தைச் சமாளிக்க, அரசியல் கட்சி சப்போர்ட் தேவைபடுது. அதனால், இருவரும் இணைந்த கைகளாகி இருக்கிறார்கள். அதனால்தான், அன்புநாதன் வீட்டு திருமணத்திற்கு வந்தும், ரசிகர்களை துணிச்சலாக போஸ்டர் அடித்து ஒட்ட வைத்திருக்கிறார் டி.ஆர்" என்றார்கள்.