கல்வியும் விளையாட்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்..! அமைச்சர் பாலகிருஷ்ணா

 

'ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல கல்வியும் விளையாட்டும் மாணவர்களிடம் வளர்ச்சிபெற்றால்தான், நாட்டின் மனிதவள கட்டமைப்பு சிறந்து விளங்கும்' என்று கரூரில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா பேசியுள்ளார்.

கரூரில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபாடி விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீரர்களுக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ஆகியோர் பரிசுகளை வழங்கி வீரர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தனர். 

இந்த முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபாடி விளையாட்டுப் போட்டி, கடந்த 24.02.2018 அன்று தொடங்கி, நேற்று (26.02.2018) வரை நடைபெற்றது. நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிப் பொறுப்பாட்சியர் ச.சூர்யபிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் முதல் இடம் சேலம் அணியும், இரண்டாம் இடத்தை கரூர் அணியும், மூன்றாம் இடத்தை கடலூர் அணியும் கைப்பற்றின. அதேபோல, பெண்கள் பிரிவில் முதல் இடத்தை திண்டுக்கல் அணியும், இரண்டாம் இடத்தை ஈரோடு அணியும், மூன்றாம் இடத்தை நாமக்கல் அணியும் கைப்பற்றின. அவர்களுக்கு முதல் பரிசாக தலா 12 லட்சமும், இரண்டாம் பரிசாக 9 லட்சமும், மூன்றாம் பரிசாக 6 லட்சமும் வழங்கப்பட்டது. கோப்பையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின்போது, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் பாலகிருஷ்ணா, 'ஒரு நாணயத்தின் 2 பக்கங்களைப்போல விளையாட்டும் கல்வியும் வளர்ச்சி பெற்றால்தான், ஒரு நாட்டின் மனிதவள கட்டமைப்பு சிறந்து விளங்கும். எனவே, விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம்கொடுத்து, ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு இணையான நிதியுதவிகளை வழங்கி விளையாட்டை மேம்படுத்திவருகிறது. குறிப்பாக கிராம அளவில், ஊராட்சி அளவில், ஒன்றிய அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவித்துவருகிறது. ரொக்கப்பரிசு ,வேலைவாய்ப்பு எனத் தனி இட ஒதுக்கீடுகளைத் தந்து விளையாட்டை மேம்படுத்திவருகிறது.  அதனடிப்படையில், கரூரில் மாநில அளவில் நடைபெற்ற கபாடி போட்டியில், ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த சேலம் அணியையும், 2-ம்  இடம் பிடித்த கரூர் அணியையும், 3-ம் இடம் பிடித்த கடலூர் அணியினரையும் மற்றும் பெண்கள் பிரிவில் முதலிடம்பிடித்த திண்டுக்கல் அணியையும், 2-ம் இடம் பிடித்த ஈரோடு அணியையும், 3-ம் இடம் பிடித்த நாமக்கல் அணியினரையும் மற்றும் பங்குபெற்ற அனைத்து அணியினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!