வெளியிடப்பட்ட நேரம்: 06:45 (27/02/2018)

கடைசி தொடர்பு:10:28 (27/02/2018)

காவேரி - கோதாவரி நதிகளை இணைத்தால் தமிழகத்திற்கு கூடுதலாக 175 டி.எம்.சி தண்ணீர்..! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

காவேரி, கோதாவரி நதிகளை இணைப்பதன்மூலம் தமிழகத்திற்குக் கூடுதலாக 175 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும் என மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

Central minister nithin katkari speech

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் சரக்கு வாகனங்கள் நிறுத்தம் மற்றும் தகவல் நிலையத்தைத் திறந்துவைத்துப் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 'நாட்டின் துறைமுகங்களை மேம்படுத்த, அதன்மூலம் வேலைவாய்ப்புப் பொருளாதாரத்தை வளர்க்க, மத்திய அரசு சாகர்மாலா திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்திற்கு, 2.5 லட்சம் கோடி செலவில். 104 திட்டங்கள் செயல்படுத்த உள்ளன. அதன் ஒரு அங்கமாக, துாத்துக்குடி துறைமுகத்தின் உள்கட்டமைப்பைப் பெருக்கும் வகையில், 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி தொடங்க உள்ளது.  இதனால், 16 மீட்டர்  வரை ஆழப்படுத்தப்பட்டு, பெரிய சரக்குக் கப்பல்கள் வந்துசெல்ல வழிவகை செய்யப்படும். இதன் காரணமாக, உள்ளூர் வேலைவாய்ப்புகள் பெருகும்.  

ஒரு நாட்டின் வளர்ச்சியில் விவசாயம், தொழிற்துறை ஆகிய 2  துறைகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது. இந்த  இரண்டு துறைகளுக்கும் தண்ணீரின் தேவை மிக இன்றியமையாத ஒன்று. குறிப்பாக, விவசாயத்துறைக்கு தண்ணீரின் தேவை மிக அவசியம். 

மகாராஷ்டிரா, விதார்பா நகரத்தில், தண்ணீர் இல்லாமல் 10 ஆயிரம் விவசாயிகள் தற்கொலைசெய்துகொண்டனர். தமிழகத்தின் தண்ணீர் தேவையைப் பற்றி நான் நன்கு அறிந்துள்ளேன். ஓர் ஆண்டில், 3 ஆயிரம் டி.எம்.சி தண்ணீர் கோதாவரி ஆற்றிலிருந்து கடலில் சென்று கலக்கிறது.

இதை காவேரியுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட  உள்ளது. இதற்கான வரைவுத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்போது, தமிழகத்திற்குக் கூடுதலாக 175 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க