வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (27/02/2018)

கடைசி தொடர்பு:16:26 (12/07/2018)

பள்ளிகளில் கடைப்பிடிக்கப்பட்ட குடற்புழு அழிப்பு தினம்..!

 

'குடற்புழுக்களை அழிப்பதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு, சோர்வு, சுகவீனம், பசியின்மை மற்றும் ரத்தச்சோகை உள்ளிட்ட நோய்கள் தடுக்கப்படுகின்றன' என்று கரூர் மாவட்ட பொறுப்பாட்சியர் சூர்ய பிரகாஷ் பேசினார்.

கரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகளுக்கான குடற்புழு நீக்க சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட பொறுப்பாட்சியர் ச.சூர்ய பிரகாஷ் தொடங்கிவைத்து, மாணவ மாணவிகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ''1-19 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் குடற்புழுவை நீக்கக்கூடிய அல்பெண்டசோல் மாத்திரைகளை ஒரே நாளில் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் வழங்கிடத் திட்டமிடப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி  மாதம் 26-ம் நாள், நாடு தழுவிய குடற்புழு நீக்க நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 

மக்கள் நல்வாழ்வுத்துறை, குடும்ப நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து, ஒரே நாளில் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது. இதனால், அதிகமாக குடற்புழு இருக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு, சோர்வு, சுகவீனம், பசியின்மை மற்றும் ரத்தச்சோகை உள்ளிட்ட நோய்கள் தடுக்கப்படும். எனவே, அனைத்துக் குழந்தைகளும் பயன்பெறத்தக்க வகையில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன" என்றார்.