வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (27/02/2018)

கடைசி தொடர்பு:07:30 (27/02/2018)

நெசவுத் தொழிலுக்கு தமிழக அரசு உதவிவருகிறது..! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

 

கரூர் மாவட்டத்தில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக நெசவுத்தொழில்தான் சிறப்பாக நடைபெறுகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்திவருகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் மாரியம்மன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் தலைமையில் 50,000 ரூபாய் மதிப்பில் கைத்தறி உபகரணங்கள் மற்றும் 25 நெசவாளர்களுக்கு முத்திரா கடனுதவிகளை  போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கி சிறப்புரையாற்றினார்.

 அப்போது, 'இந்தியாவில் கைத்தறித் தொழில் பாரம்பர்யம் மிக்க தொழிலாகும். கரூரில், நெசவுத்தொழிலை 25,000 நெசவாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர். இத்தகைய நெசவாளர்கள் மற்றும் நெசவுத்தொழில் சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அரசு வழங்கிவருகிறது.

கரூர் மாவட்டத்தில், 2017-2018 -ம் நிதியாண்டில் 565 நெசவாளர்களுக்கு 28.25 கோடி ரூபாய் மதிப்பில் முத்திரா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் இந்தத் திட்டத்தின் கீழ் 25 நெசவாளர்களுக்கு 7.50 லட்ச ரூபாய் மதிப்பில் முத்திரா திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது. இதுபோன்று, கைத்தறி பெருங்குழுமம் திட்டத்தின் கீழ் 573 நெசவாளிகளுக்கு 1.50 கோடி ரூபாய் மதிப்பில் தறி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நெசவாளர்கள், இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி, தொழிலாளர் மேம்பாடு அடைந்து, கரூர் மாவட்டத்திலுள்ள 55 கூட்டுறவு சங்கங்களும் லாபத்தில் இயங்க வேண்டும். ஆரம்பத்தில், உள்நாட்டுத் தேவைகளுக்கு மட்டுமே உற்பத்திசெய்யப்பட்ட நெசவுத்தொழில், தற்போது உலக நாடுகளில் ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யத்தக்க வகையில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. தொடர்ந்து வளர்ச்சி பெற, தமிழக அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.