வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (27/02/2018)

கடைசி தொடர்பு:12:04 (27/02/2018)

`ஜெயலலிதாவுக்கு என்ன நீதியோ அதுதான் 18 பேருக்கும்!' - தினகரன் இலக்கும் எடப்பாடி பழனிசாமி முடிவும்

எடப்பாடி பழனிசாமி

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 'ஜெயலலிதா படம் வைக்கப்பட்ட விவகாரத்தை, 'சபாநாயகரின் அதிகார வரம்பு' எனக் குறிப்பிட்டார் தலைமை நீதிபதி. தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பும் இதையொட்டியே வரலாம்' என்கின்றனர் எடப்பாடி பழனிசாமி தரப்பில். 

கள்ளக்குறிச்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ பிரபு, கடந்த 23-ம் தேதி டி.டி.வி.தினகரனைச் சந்தித்தார். 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்க வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, ஆளும்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் சந்தித்தது, புதிய விவாதத்தை ஏற்படுத்தியது. சந்திப்புக்குப் பிறகு பேசிய எம்.எல்.ஏ பிரபு, 'பூனைக்கு மணி கட்டவே தினகரனைச் சந்தித்தேன். தமிழகத்தை வழிநடத்துவதற்கு தினகரனால் மட்டுமே முடியும். அ.தி.மு.க-வில் இருந்து மக்கள் சேவையைச் சரிவர செய்ய முடியவில்லை. எம்.எல்.ஏ பணியைச் செய்வதற்கு மாவட்டத்திலேயே பல முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன' எனப் பேட்டி அளித்தார். இதைப் பற்றி நம்மிடம் விவரித்த தினகரன் ஆதரவாளர் ஒருவர், "கள்ளக்குறிச்சி பிரபு வந்தது ஒரு சிறு நிகழ்வுதான். இன்னும் 15 நாள்களில் 10 எம்.எல்.ஏ-க்கள் வர இருக்கிறார்கள். 'இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்' என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார். தொடக்கத்தில் அவருடைய முயற்சிக்கு சசிகலா எந்த ஆதரவையும் கொடுக்கவில்லை. கடந்த 19-ம் தேதி நடந்த சிறை சந்திப்பில், ஆட்சியை அகற்றுவதற்கு ஒப்புதல் கொடுத்தார் சசிகலா. இதன் எதிரொலிதான் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு சந்தித்தது. கொங்கு மண்டல எம்.எல்.ஏக்களைவிடவும் வடபுலம் மற்றும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களைத்தான் குறி வைத்திருக்கிறார் தினகரன். கொங்கு மண்டல எம்.எல்.ஏ-க்கள் கடைசி நேரத்தில் மனம் மாறிவிடுவார்கள் என்பதுதான் காரணம். 

தினகரன்அமைச்சர் பதவி கிடைக்காமல் ஏமாந்தவர்கள், அரசு ஒப்பந்தங்களில்  புறக்கணிக்கப்படும் எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட அமைச்சர்களால் ஓரம்கட்டப்படுபவர்கள் என அனைத்துத் தரப்பினர் குறித்தும் பெரிய பட்டியலையே கையில் வைத்திருக்கிறார் தினகரன். அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. எம்.எல்.ஏ-க்களில் பலரும், ' இப்போதுள்ள ஆட்சியாளர்களால் எதையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்துவிட்டோம். உங்களால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்' என தினகரனிடம் பேசி வருகின்றனர். எம்.எல்.ஏ-க்களின் மனமாற்றத்துக்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

'ஆட்சியில் உள்ளவர்களை முன்னிறுத்தி அடுத்தமுறை எம்.எல்.ஏ ஆக முடியுமா என்ற சந்தேகம் அவர்கள் மனதில் ஏற்பட்டுவிட்டது. ஒருவேளை ஆட்சி கலைக்கப்பட்டால், மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்புக் கிடைக்குமா என்ற சந்தேகமும் இருக்கிறது. தினகரன் பக்கம் இருந்தால் தேர்தல் செலவு ஒரு பொருட்டாக இருக்கப் போவதில்லை. மக்களை எதிர்கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதுதான் பிரதான காரணம். இந்த ஒரு காரணத்தை முன்வைத்தே அவரை நோக்கி எம்.எல்.ஏ-க்கள் வர இருக்கிறார்கள். தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு ஒருபுறம் இருந்தாலும், ஆட்சியை அகற்றத் தேவையான எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் டி.டி.வி" என்றார் விரிவாக. 

ஆனால், இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களோ, "ஒரு எம்.எல்.ஏ அவர் பக்கம் சென்றதால் எந்தப் பாதிப்பும் இல்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடிக்கும் இடையில் நல்ல உறவு நீடிக்கிறது. இந்த உறவில் எந்த விரிசலும் ஏற்படவில்லை. 'முதலமைச்சர் பதவியைக் கேட்கிறார் பன்னீர்செல்வம்' என தினகரன் பேசுவதைப் பற்றியும் யாரும் கவலைப்படவில்லை. 'அவர் ஓர் அரசியல்வாதி; எதையாவது பேசி தன் இருப்பைக் காட்டத்தான் முயல்வார்' என இந்த விவகாரத்தைப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம், ' பன்னீர்செல்வம் முதல்வராக இருந்திருந்தால் அவருடைய சமுதாய வாக்குகளைத் தினகரன் பிரித்துக்கொண்டு போகவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது' என பா.ஜ.க-வினர் சிலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படிப் பேசுவதையும் பன்னீர்செல்வம் எதிர்க்கவில்லை. எடப்பாடி பழனிசாமியைத் தாண்டி எதுவும் செய்துவிட முடியாது என்பதை பன்னீர்செல்வம் புரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் தினகரன் பேச்சுக்கு எதிராக எந்த விளைவையும் அவர் காட்டவில்லை. 

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை அனைவரும் பூதாகரமாகப் பேசுகின்றனர். நேற்று உயர் நீதிமன்றத்தில், சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை அகற்றுவது தொடர்பான மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்த கருத்து மிக முக்கியமானது, ' ஜெயலலிதா படம் தேவையில்லை என மக்கள் நினைத்தால், அது வரும் தேர்தலில் எதிரொலிக்கும். சபாநாயகரின் முடிவில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. எனினும், சபாநாயகரின் உத்தரவு தனிமனித உரிமைகளை பாதிக்கும் என்றால் நீதிமன்றம் தலையிடும். தேர்தலுக்குப் பின்னர் வரும் புதிய சபாநாயகர் ஜெயலலிதா படத்தை அகற்றுவது குறித்து முடிவெடுப்பார்' எனக் கருத்து கூறினார். 'சபாநாயகர் முடிவில் தலையிட அதிகாரம் இல்லை' எனக் கூறும் கருத்து, 18 எம்.எல்.ஏ-க்களின் வழக்குக்கும் பொருந்தும் என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ' ஆட்சிக்கு எதிராக தினகரன் நடத்தும் மாய வேலைகள் எதுவும் எடுபடாது' என்பதிலும் உறுதியாக இருக்கிறார் முதல்வர்" என்கின்றனர். 
 


டிரெண்டிங் @ விகடன்