தெற்கு ரயில்வேயில் 53,870 பணியிடங்கள் விளம்பரத்தில் பாதகம்! உடனே மாற்ற பியூஷ் கோயலுக்கு சென்ற கடிதம்

'ஆள் சேர்ப்புக்காக, தெற்கு ரயில்வே தற்போது கொடுத்துள்ள விளம்பரத்தில் மாற்றங்கள் வேண்டும்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக, அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் எழுதியுள்ள கடிதத்தில், ``தெற்கு ரயில்வே நிர்வாகம், உதவியாளர்கள் மற்றும் இதர பிரிவுகளுக்கான ஆள் சேர்ப்புக்கான விளம்பரத்தில், சில பாதகமான அம்சங்கள் உள்ளது சம்பந்தமாக, தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். 7-வது மத்திய சம்பள கமிஷனின் ஒன்றாவது நிலைக்கான பல்வேறு பிரிவுகளுக்கான 62,900 காலியிடங்களை நிரப்புவதற்கு, தெற்கு ரயில்வே கொடுத்துள்ள விளம்பரத்தில் தரப்பட்டுள்ள தகுதி நிர்ணயம் மிகவும் பாரபட்சமாக உள்ளது.

பூர்த்திசெய்யப்பட உள்ள 62,900 பணியிடங்களில் 53,870 பணியிடங்கள் உதவியாளர் பதவிக்கானது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள், ஐடிஐ அல்லது என்சிவிடி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டுமென்ற அறிவிப்பு தெரிவிக்கிறது. இதற்குச் சமமான அல்லது அதற்கு மேல் தகுதி பெற்றவர்கள் எவரும் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று அறிவிப்பு கூறுகிறது. ஐடிஐ மற்றும் என்சிவிடி தேர்ச்சி பெற்ற ஒருவர், எப்படியாவது வேலை பெற வேண்டும் என்ற முயற்சியில் மேலும் தனது தகுதியை உயர்த்திக்கொள்ள முயல்வது இயல்பானது. மிகவும் போட்டி மிகுந்த சூழ்நிலையில், வேலை கிடைக்க இவ்வாறு செய்கிறார்கள். ஒவ்வொரு தனி மனிதனும் இவ்வாறு செய்வது இயல்பானது. இவ்வாறிருக்கும்போது, இந்தத் தகுதிக்குச் சமமான அல்லது அதற்கு மேலான தகுதியுள்ளவர்களை தவிர்ப்பது என்பது பெருமளவிலான விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஐடிஐ கல்வி நிலையங்கள் மிகக் குறைவாக உள்ளதால், ஐடிஐ தேர்ச்சிபெற்றவர்கள் மிகக் குறைவாக உள்ள நிலையில், நாட்டின் இப்பகுதியில் வாழும் வேலையற்ற பெரும்பாலான இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இத்தகைய நிபந்தனை என்பது தமிழகத்தில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, தமிழகத்துக்கு வெளியே உள்ள இதர பகுதி விண்ணப்பதாரர்கள் அதிக அளவில் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது என தமிழகத்தில் உள்ளவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 2013-ல் வெளியிடப்பட்ட ஆள்சேர்ப்புக்கான விளம்பரத்தைக் காட்டிலும் இப்போது வெளியிட்டுள்ள விளம்பரம், பல பாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளது. பொதுப் பிரிவுக்கான கட்டணம் என்பது ரூ.100 என்பதிலிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வேலையற்ற இளைஞர் எவ்வாறு இத்தகைய பெருந்தொகையைச் செலுத்த முடியும்?

கடந்த முறை எஸ்சி - எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. தற்போது அவர்கள், ரூ.250 செலுத்த வேண்டும் என்றும் பின்னர், இத்தொகை திருப்பித் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த முறை செய்ததுபோல இந்த ஆண்டும் கட்டணம் எதுவும் இல்லை என்று அறிவித்தால், எஸ்சி - எஸ்டி விண்ணப்பதாரர்கள் செலுத்தும் தொகையை மீண்டும் திருப்பிச்செலுத்தும் கூடுதல் வேலையைத் தவிர்க்க முடியும். கடந்த முறை 1. பட்டதாரிகள், 2. 10-வது தேர்ச்சிபெற்றவர்கள், 3. ஐடிஐ - என்சிவிடி என்ற முறையில் தகுதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை ஐடிஐ, என்சிவிடி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்று புரிந்துகொள்ள முடியவில்லை. பணியில் சேர்வதற்கு முன், அவர்களுக்கு குறிப்பிட்ட வேலைக்கான பயிற்சி என்பது அளிக்கப்பட உள்ளது. எனவே, ஐடிஐ - என்சிடிவி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இத்தகைய பாதகமான அம்சங்கள் தற்போதைய ஆள் சேர்ப்புக்கான விளம்பரத்தில் உள்ள நிலையில், தாங்கள் தலையிட்டு, ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம், தற்போதைய விளம்பரத்தைத் திரும்பப்பெற்று, 2013-ல் விளம்பரம் செய்ததுபோல ஒரு விளம்பரத்தைப் புதிதாக வெளியிடும்படி அறிவுறுத்துமாறு வேண்டுகிறேன்." 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!