வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (27/02/2018)

கடைசி தொடர்பு:13:45 (27/02/2018)

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது கறுப்புக்கொடி வீச்சு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வுசெய்ய வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டியதால், படப்பையில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுநர், கறுப்பு கொடி

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்துவருகிறார். மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் ஆய்வுசெய்துவருகிறார் எனக் கூறி, பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆளுநர் செல்லும்போது, அதற்கான பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் அளிக்க வேண்டும். இதற்காக பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்படுகிறார்கள். இதனால், வழக்கமான மாவட்டப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆளுநரின் வருகையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாநில சுயாட்சிக்கு எதிராக ஆய்வுசெய்ய வருகைதரும் ஆளுநரை எதிர்த்து, காஞ்சிபுரம் வடக்கு மண்டல தி.மு.க சார்பில் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க தி.மு.க-வினர் முடிவுசெய்தனர். வடக்கு மாவட்டச் செயலாளர் த.மோ.அன்பரசன் தலைமையில், தாம்பரம் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன், பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 2000 தி.மு.க-வினர் கலந்துகொண்டனர்.

ஆளுநர், கறுப்பு கொடி

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வுசெய்ய, இன்று காலை 10.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்தார். அப்போது, அளுநருக்கு எதிராக கோஷமிட்ட தி.மு.க-வினர், அவரது காரின் முன்பு கறுப்புக்கொடிகளை வீசினார்கள். இதனால், ஆளுநர் அதிர்ச்சியடைந்தார். பின்பு, காவல்துறையினர் கறுப்புக்கொடிகளை அகற்றினார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுசெய்ய உள்ளார். அங்கும் ஆளுநருக்கு எதிரப்பு தெரிவிக்கும்வகையில் தி.மு.க தெற்கு மாவட்டம் சார்பில், மாவட்டச் செயலாளர் சுந்தர் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் திரண்டிருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க