புறக்கணித்த சமூகம்... வாழ்வளித்த நீதிமன்றம்... அரசுப் பணிகளில் அசத்தும் திருநங்கைகள்! | Good to know Transgenders get government job at nagapattinam

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (27/02/2018)

கடைசி தொடர்பு:13:10 (27/02/2018)

புறக்கணித்த சமூகம்... வாழ்வளித்த நீதிமன்றம்... அரசுப் பணிகளில் அசத்தும் திருநங்கைகள்!

கேலிகளையும், புறக்கணிப்புகளையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு  நம் சமூகத்தில் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறார்கள் திருநங்கைகள். மற்றவர்களின் புறக்கணிப்புகளையும் தூண்டுகோலாக எடுத்து முன்னேறி வரும் அவர்களுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் முதன்முறையாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மூன்று திருநங்கைகளுக்கு நீதித்துறையில் அரசு வேலை கிடைத்துள்ளது. தொடர்ந்து புறக்கணிப்புக்கு உள்ளாகும் சமூகத்திலிருந்து மெள்ள மெள்ளத் தலைதூக்கத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். வாழ்த்துகளைச் சொல்லி அவர்களிடம் பேசினோம். 

சுஜி :

''என்னுடைய சொந்த ஊர் நாகப்பட்டினம்தான். எங்க வீட்டுல நானும், என் அண்ணனும் மட்டும்தான். எனக்குச் சின்ன வயசுலருந்தே ஆம்பள பசங்ககூட சேர்ந்து விளையாடுறது படிக்கிறதுன்னு எதுவும் பிடிக்காது. பொம்பள பிள்ளைங்ககூடவேதான் விளையாடிட்டு இருப்பேன். அதே மாதிரி மேக்கப் பண்ணிக்க ரொம்பப் பிடிக்கும். தொடர்ந்து என் நடவடிக்கைகள் பொண்ணுங்க மாதிரியே மாறினதை உணர ஆரம்பிச்சேன்.

வீட்டுல என்னைப் பத்தி தெரிஞ்சு 'ஊருக்கு' பயந்து என்னை ஒதுக்கி வைக்க ஆரம்பிச்சாங்க. பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் கஷ்டப்பட்டு படிச்ச என்னால அதுக்கப்புறம் தாக்குப்பிடிக்க முடியலை. வீட்டை விட்டு வெளியேறிட்டேன். என்னை மாதிரி கைவிடப்பட்ட சுபத்ராவைத் தத்தெடுத்துக்கிட்டேன். எனக்கும், என் பொண்ணுக்கும்தான் அரசாங்கத்துல வேலை கிடைச்சிருக்கு.  

நான் கரகாட்டம், ஒப்பாரி பாட்டு, வயல் வேலைன்னு எனக்குக் கிடைக்கிற வேலையைப் பண்ணிட்டு இருந்தேன். கரகாட்டம் ஆடுறதனால அரசு மானியத் தொகையா இருபதாயிரம் ரூபாய் கொடுத்தாங்க. அதை வெச்சு கரகாட்டத்துக்குத் தேவையான உடைகளை வாங்கிப்பேன். கரகாட்டம்தான் எனக்குச் சாப்பாடு போட்டுச்சு. இப்போ அரசாங்கம் எனக்குத் தன்னார்வலர் வேலை கொடுத்திருக்கு. இனி எனக்கும் என் பொண்ணுக்கும் கவலை இல்லை. என்னை மாதிரி மத்த திருநங்கைகள் வாழ்க்கையிலேயும் ஒளி வரணும்.''

திருநங்கைகள் சுபா, சுஜி, சுப்ரியா

சுபா :

''நான் ஒரு திருநங்கைன்னு உணர ஆரம்பிச்சதை வீட்டுல சொன்னேன். எனக்கு ஒரு அண்ணன், தம்பி இருக்காங்க. வீட்டுல பொம்பளைப் புள்ளை இல்லாத குறையை போக்க வந்தவன்னு என்னை இப்ப கொண்டாடுறாங்க. நம்ம வீட்டு ஆள்கள் மாதிரியே பொது ஜனங்களும் இருப்பாங்களா என்ன... நிறைய கேலி கிண்டல் தொடர்ந்தது. அதையெல்லாம் பொறுத்துகிட்டு ஐ.டி.ஐ முடிச்சேன்.  அதுக்கப்புறம் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்த்தேன். இலவச சட்ட மையத்துல எங்களுக்கு உதவி வேணும்னு கேட்டதும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினதுக்கு முதல்ல நன்றி சொல்லியே ஆகணும். எங்களை மாதிரியான திருநங்கைகளுக்கு அரசு உதவுனா இந்தச் சமூகத்துல நாங்களும் தலைநிமிர்ந்து வாழ முடியும்.''

சுப்ரியா :

''நான் கணிதத்துல பி.ஹெச்.டி பண்ணிட்டு இருக்கேன். எனக்கு படிக்கிறதுன்னா அவ்வளவு பிடிக்கும். என் வீட்டுல உள்ளவங்களுக்கு இப்ப வரைக்கும் நான் ஒரு திருநங்கைங்கிற விஷயம் தெரியாது. ஒருகட்டத்துல என்னை மறைச்சு வாழ விரும்பாம வீட்டை விட்டு வெளியேறிட்டேன். என்னை சுஜி அம்மா தத்தெடுத்துகிட்டாங்க. இப்போ நான் அவங்ககூடத்தான் இருக்கேன். தமிழகத்துல முதன்முறையா நீதித்துறையில் எங்களுக்கு அரசு வேலை கொடுத்தது ரொம்பவே சந்தோசமா இருக்கு. ஆனாலும், நான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கேன். நல்லா படிச்சு நிச்சயம் அந்தத் தேர்விலேயும் பாஸ் ஆகி அரசு வேலையில் பெரிய போஸ்டிங்கில் இருப்பேன்'' என்கிறார் தன்னம்பிக்கை மனுஷி..!''

திருநங்கை சுப்ரியா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்