`மீண்டும் உணர்த்தவேண்டிய நேரம் வந்துவிட்டது' - கூட்டாகக் கொந்தளித்த மூன்று எம்.எல்.ஏ-க்கள்!

சென்னை ஐ.ஐ.டி-யில் சம்ஸ்கிருத பாடல் இசைக்கப்பட்டதற்கு தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய எம்.எல்.ஏ-க்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். 

எம்எல்ஏக்கள்

சென்னை ஐ.ஐ.டி-யில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக மகா கணபதி என்ற சம்ஸ்கிருத பாடல் இசைக்கப்பட்டது. அது, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, தமிழ் அமைப்புகளும் தமிழக அரசியல் கட்சிகளும் தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றன. மேலும், இவ்விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரிக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன. தற்போது, தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய எம்.எல்.ஏ-க்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மூவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், "ஐ.ஐ.டி-யில், வழக்கமாகப் பாடப்படும் தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் புறக்கணிக்கப்பட்டு, சம்ஸ்கிருதத்தில் பாடல் பாடப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

ஒரு பக்கம் 'வணக்கம்' என்று ஒரு வார்த்தையைப் பேசி, தமிழைப் புகழ்வதுபோல நடிப்பதும் மறுபுறம் இந்தி - சம்ஸ்கிருத மொழித் திணிப்புகளைத் தந்திரமாகச் செய்வதும், காவி ஆதிக்க சக்திகளின் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். இந்தியாவையே அதிரவைத்த மொழியுணர்வுப் போராட்டத்தின் தாயகம் தமிழ்நாடு என்பதை 'வடக்கில்' இருப்பவர்களுக்கு மீண்டும் உணர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கருதுகிறோம். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் எழுந்த இனமான கிளர்ச்சியின் உணர்வுகள் அப்படியே பாதுகாக்கப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். மொழி உணர்வோடு மோத வேண்டாம் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்ற தமிழர் விரோதப் போக்குகளை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது எனத் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!