நொடிப்பொழுதில் ரூ.2.50 லட்சத்தை இழந்த வியாபாரி! போலீஸ் சொன்ன அடடே அட்வைஸ்

பட்டப்பகலில் மளிகைக்கடைக்காரரிடமிருந்து 2.50 லட்சத்தை பைக் கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர். கொள்ளையர்களைப் பிடிக்க முடியாத காரணத்தை இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறியிருப்பது வேதனையாக இருப்பதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொள்ளைச் சம்பவம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த சின்னவளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகானந்தம். இவர், அப்பகுதியில் மளிகைக்கடை நடத்திவருகிறார். இந்நிலையில், வீடு கட்டப் பணம் எடுப்பதற்காக அவரது டூவீலரில் ஜெயங்கொண்டத்தில் உள்ள கனரா வங்கிக்கு வந்துள்ளார். வங்கியில் ரூ.2.50 லட்சத்தை எடுத்துக்கொண்டு, வீட்டுக்குச் செல்வதற்காக அவரது பைக்கை எடுக்க முற்பட்டபோது, நொடிப்பொழுதில் டூவீலரில் டிப்டாப்பாக வந்த இரண்டு பேர், சண்முகானந்தத்தின் பணப்பையைப் பிடுங்கிக்கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். அதிர்ச்சியடைந்த அவர், சத்தம்போட்டு கூச்சலிட்டார். இதுபற்றி தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீஸார், கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர். ஆனால், போலீஸாருக்கும் டிமிக்கிகொடுத்துவிட்டு கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர்.

போலீஸ்- கொள்ளையர்கள்

இதுகுறித்து, ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் சண்முகானந்தம் புகார் கொடுத்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப் பதிந்து, கொள்ளையர்களை வலைவீசித் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம்குறித்து இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி கூறுகையில், "ஜெயங்கொண்டம் நகரில் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை பொதுமக்கள் பேனர்கள் வைத்து மறைத்து விடுகின்றனர். கேமரா எங்கு உள்ளது என்பதே தெரியவில்லை. இது, கொள்ளையர்களுக்கு ஏதுவாக உள்ளது.  இதுபோன்ற தவறுகள் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை மறைக்காமல் பேனர் வைக்க வேண்டும் என்கிறோம். இனி, பேனர் வைப்பவர்கள் போலீஸாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று முடித்துக்கொண்டார். "இப்படி பேனர்களை வைப்பது அரசியல் கட்சிகள்தான். பொதுமக்கள் அல்ல" என்று வேதனையுடன் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

போலீஸ்- கொள்ளையர்கள்

'இதற்கு முன்பு, ஜெயங்கொண்டத்தில் பல வழிப்பறிகள், கொலை, கொள்ளை வழக்குகள் நடந்துள்ளன. தற்போதுவரை குற்றவாளிகளை காவல்துறையினர் கைதுசெய்தபாடில்லை. இந்த வழிப்பறியில் ஈடுபட்ட திருடர்களை எப்படி பிடிக்கப்போகிறார்கள்' என்று காவல்துறையைப் பார்த்து கிண்டல் அடிக்கிறார்கள் ஜெயங்கொண்டம் மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!