'எழுச்சியுடனும் கட்டுப்பாட்டுடனும் நடந்த கூட்டம்'- கமல் நெகிழ்ச்சி அறிக்கை

கலாம் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய கமல், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கோலாகலமாக கட்சியின் பெயர் மற்றும் கொடியை வெளியிட்டார். தற்போது, தனது முதல் அரசியல் பயண பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கமல்

அதில், ''உலகத் தாய்மொழி தினமான பிப்ரவரி 21-ம் தேதியன்று, ‘மக்கள் நீதி மய்யத்தின்’ தொடக்க விழா, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நடைபெற்றது. மிகுந்த எழுச்சியுடனும், கட்டுப்பாட்டுடனும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை வெற்றிபெறச்செய்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். முதல் நன்றியை மதுரை மாநகர மக்களுக்கு காணிக்கையாக்குகிறோம். தொடர்ந்து நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி. நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், டெல்லி சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பாரதிக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டு ஒத்துழைத்துச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், விழா நிகழ்ச்சிகளை உயிர்ப்புடனும் துல்லியமாகவும், உலகமெங்கும் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் கொண்டுசேர்த்த ஊடகத்துறை மற்றும் சமூக வலைதளங்களைச் சார்ந்த அனைத்து பெருமக்களுக்கும் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!