வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (27/02/2018)

கடைசி தொடர்பு:16:15 (27/02/2018)

'ஏமாற்றுகிறாரோ...'- தமிழிசை மீது சந்தேகம் எழுப்பும் கே.பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன்

புதுக்கோட்டை நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று, மாநில விவசாயிகள் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வந்திருந்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "காவிரி நதிநீர் பிரச்னையில் மிக விரைவில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்திவருகிறோம். ஆனால், மத்தியில் உள்ள பா.ஜ.க-வின் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது, அதுகுறித்து தங்கள் வாயைத் திறக்காமல் அமைதிகாக்கிறார்கள். சமீபத்தில் சென்னைக்கு வந்த பிரதமரிடம், தமிழக முதல்வர் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சியில் பேசும்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுகுறித்து வேண்டுகோள் வைத்தார். ஆனால், பிரதமர் கண்டுகொள்ளவே இல்லை. அதன்பிறகு, மறுநாள் டெல்லி செல்ல சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோதும் தமிழக முதல்வர் காவிரிகுறித்த வேண்டுகோள் கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்.

அப்போதும் அவர் சாதகமான பதிலைத் தரவில்லை. நேற்று சென்னைக்கு வந்த நீர்வளத்துறை அமைச்சரான நிதின்கட்கரி, கர்நாடகாவும் தமிழ்நாடும் எங்களுக்கு இரண்டு கண்கள் போல என்று கூறுகிறார். ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டும் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறார்கள். உச்ச நீதிமன்ற அறிவுரையை அமல்படுத்துவதில் தாமதப்படுத்துவதற்கான காரியங்களை வலுப்படுத்தும் விதமாகவே அவரது பேச்சும் நடவடிக்கையும் இருந்தது. உச்ச நீதிமன்றம் சொன்னதை நிறைவேற்றாமல் துணிச்சலாக இவர் பேசுவது, நீதிமன்ற அவமதிப்பாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தை பா.ஜ.க தலைவர்கள் மதிக்கவில்லை என்பது புரிகிறது. டெல்லி தலைவர்கள் தமிழ்நாட்டுக்கே வந்து இப்படி பாராமுகமாக இருக்கும்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் மத்திய அரசு அமைக்கும் என்று சகோதரி தமிழிசை கூறிவருகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, பா.ஜ.க தலைவர்கள் தமிழக மக்களை ஏமாற்றுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஓ.என்.ஜி.சி-க்கு ஆதரவாக நான் ஒருபோதும் பேசவில்லை. ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள், பல்வேறு திட்டங்கள்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்துவருகின்றன. அதில் ஒரு பகுதியை, அந்த நிறுவனங்கள் அமைந்துள்ள ஊருக்கும் மக்களுக்கும் நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதை, எந்த நிறுவனமும் செய்வதில்லை. அதேபோல, எண்ணெய் எடுப்பதாகக் கூறிக்கொண்டு ஊரில் நுழைந்துவிட்டு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கை வாயுக்கள் எடுக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு'' என்று கூறினார்.

மேலும், ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்படுவது, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சண்டிகரில் உயிரிழந்தது, காஞ்சிபுரம் கருணை இல்லத்தில் முதியவர்கள் கொல்லப்பட்டு அவர்களின்  எலும்புகள் வெளிநாட்டில் விற்கப்படுவதாக எழுந்த விவகாரங்கள் குறித்தும் பேசினார்.