'உங்கள் முதுகை திரும்பிப் பாருங்கள்' - தினகரனுக்கு அட்வைஸ் செய்த ஜெயக்குமார்!

தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ஜெயக்குமார்

சென்னை ஐ.ஐ.டி-யில் நேற்று மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு பதிலாக சம்ஸ்கிருத பாடல் ஒலிபரப்பப்பட்டது. ஐ.ஐ.டி-யின் இந்தச் செய்கைக்குத் தமிழ் அமைப்புகளுக்கிடையே எதிர்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் கட்சிகள் உட்பட அனைவரும் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் ஏற்படக் கூடாது என எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஐஐடியின் செயலை கண்டித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், "ஐ.ஐ.டி-யில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாதது கண்டனத்துக்குரியது. இதற்கு, சென்னை ஐ.ஐ.டி அளித்துள்ள விளக்கம் ஏற்புடையதல்ல. தமிழ் அவமதிக்கப்படுவதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களுடன் விரைவில் பிரதமர் மோடியைச் சந்தித்து வலியுறுத்துவோம்" என்றார். 

முன்னதாக டி.டி.வி.தினகரன் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆரம்பத்திலிருந்தே அதிமுக தொண்டர்கள் முதல் முதல்வர் வரை அனைவரையும் தினகரன் ஒருமையில் பேசிவருகிறார். தினகரன் முதலில் நாகரிகமாகப் பேச கற்றுக்கொள்ள வேண்டும். பின்பு மற்றவரிடம் நாகரிகத்தை எதிர்பார்க்கலாம். முதலில் உங்களுடைய முதுகை திரும்பிப் பாருங்கள்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!