வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (27/02/2018)

கடைசி தொடர்பு:16:50 (27/02/2018)

ஆர்ப்பாட்டத்தில் பக்கோடா விற்ற இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்!

இளைஞர் காங்கிரஸ்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 280 கோடி ரூபாய் மோசடியையும்  11,000 கோடி முறையற்ற பண பரிவர்த்தனைகளையும் செய்த நிரவ் மோடிக்கு எதிராக நாட்டில் கடுமையாக எதிர்ப்புகள் கிளம்பிவரும் நிலையில் மதுரை இளைஞர் காங்கிரஸ் சார்பாக கே.ஆர்.பாலமுருகன் தலைமையில் மதுரை செல்லூர் 60 அடி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (27.2.2018) நடந்தது. இதில் பி.ஜே.பி-க்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அப்போது பேசிய நிர்வாகிகள், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்களின் உதவியுடன் “லெட்டர் ஆஃப் அண்டர்டேக்கிங்’’ எனும் வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் குறுகிய கால கடனை எந்த வரம்பும் இல்லாமலும், வங்கியின் கவனத்துக்கு வராமலும் பெற்றுள்ளதாகவும் இதன் மதிப்பு 11,400 கோடி ரூபாயாகவும் இதுவே இந்தியாவில் வங்கித்துறையில் நடைபெற்ற மிகப்பெரும் மோசடியாகப் பதிவாகியுள்ளது. ஆனால், பி.ஜே.பி அரசோ இதைக் கண்டுகொள்ளாமல் ஊழல் இல்லாத ஆட்சியை அமைத்துவருகிறோம் எனப் பொய் பிரசாரம் செய்துகொண்டு எம்.பி.ஏ, பி.இ படித்த பட்டதாரிகளைப் பக்கோடா விற்கச் சொல்லி மக்களை ஏமாற்றிவருகிறது. எனவே, ஊழலுக்குத் துணை நிற்கும் பி.ஜே.பி அரசைக் கண்டித்தும் மோசடி செய்த நிரவ் மோடியைக் கண்டித்தும் இந்தப் பக்கோடா விற்கும் போராட்டத்தை நடத்தி மதுரை இளைஞர் காங்கிரஸ் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்'' எனத் தெரிவித்தனர் .