வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (27/02/2018)

கடைசி தொடர்பு:13:56 (02/03/2018)

`எப்படி இருக்கிறார் விழுப்புரம் ஆராயி?’ ஜிப்மரிலிருந்து ஸ்பாட் ரிப்போர்ட்

விழுப்புரத்தில் 10 வயது சிறுவனை கழுத்தை மிதித்துக் கொலை செய்த மர்மக் கும்பல், அவரின் தாயையும் 14 வயது சகோதரியையும் தலையில் கொடூரமாகத் தாக்கியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புத்தூர் காலனியைச் சேர்ந்தவர் ஆராயி. கூலித் தொழிலாளியான இவரும் இவரின் 14 வயது மகள் தனமும் அடையாளம் தெரியாத மர்மக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தின்போது ஆராயியின் 10 வயது மகன் சமையன் கழுத்திலும் வயிற்றிலும் கொடூரமாக மிதித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் ஆராயி மற்றும் தனம் இருவரின் தற்போதைய நிலை குறித்து விசாரிக்க அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்றோம். சம்பவம் நடந்த 22-ம் தேதி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தற்போது தனித்தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சைப் பிரிவின் மூன்றாவது மாடியில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமி தனம் தற்போதுவரை சுய நினைவின்றியே இருக்கிறார். அவரின் தலையில் பலமாகத் தாக்கப்பட்டதால் மூளை பெருமளவு பாதிக்கப்பட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. அவர் காதுகளின் வழியே தொடர்ந்து வெளியேறிக்கொண்டிருக்கும் ரத்தக்கசிவைக் கட்டுப்படுத்த முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு டியூப் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல காதில் எலும்பு முறிவுக்காகச் சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சுய நினைவின்றி அவ்வப்போது கையையும் காலையும் தொடர்ந்து அசைத்துக்கொண்டே இருப்பதால் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

விழுப்புரம் ஆராயி

நான்காவது மாடியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆராயியிக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போதுவரை அவருக்கும் சுயநினைவு திரும்பாத நிலையில் அவர் கை மற்றும் கால்களும் கட்டப்பட்டிருக்கின்றன. தற்போது இவர் மூக்கில் குழாய் பொருத்தப்பட்டு அதன் வழியாகத் திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்காக ஆராயி மற்றும் தனம் இருவரின் தலைகளிலும் முடி நீக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மருத்துவக் கண்காணிப்பு அதிகாரி படேல், "கடந்த 22-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அன்று என்ன நிலையில் இருந்தனரோ அதே நிலையில்தான் தற்போதும் உள்ளனர். தலையில் பலத்த அடிப்பட்டுள்ளதால் எப்போது நினைவு திரும்பும் என்று கூற முடியாது" என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க